செவ்வாய், 12 மே, 2020

மாலை முத்தம்

மாலை முத்தம்


கற்றாழையின் கூர் முனையில்
நின்றுபார்த்துவிட்டுக் கீழிறங்கும்
எறும்பொன்றின் கால்களைப்பற்றிக்கொள்ள நினைக்கும் கற்றாழையால்
முடியவில்லை
எறும்பின் கால்களைக் கட்டுப்படுத்த

மாலை நேரத்து
மஞ்சள் சூரியனிடமிருந்து
தன் நிழலை எடுத்து
வெள்ளாமைக் காட்டில்
விளைந்து நிற்கும் பயிர்களுக்கு
வலிக்காமல்
பரப்பி வைத்திருக்கிறது
பொழியோரக் கருவேலமரமொன்று

கருவேலமரக் கிளைகளெங்கும்
இசைக்குறிப்புகளைத் தொங்கவிட்டிருக்கும்
கற்றாழைக்குருவிகளின்
பாடலைக் கேட்டு ரசித்தபடி
நகராமல் நின்றுவிட்ட சூரியனைப்
பிடித்துக் கீழே இழுக்கிறது
நீலச்சேலைகட்டி அமர்ந்திருக்கும் மலை

கற்றாழையில் இறங்கிக்கொண்டிருக்கும் எறும்பையும்
பாடலிசைக்கும் கற்றாழைக்குருவிகளையும்
பார்த்தபடி மலரும்
அந்தி நட்சத்திரமொன்று
அவசர அவசரமாய் இறங்கி வந்து
என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு
வானம் தேடுமெனச் சொல்லிவிட்டு
ஓடுகிறது

பாலைக்குடித்துவிட்டு
கிணற்று மேட்டுக்கு ஓடிய
கன்றுக்குட்டியைப் பிடிக்க ஓடுகிறேன்
கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருக்கிறது
வானத்துக்குப் போவதாய்ச்
சொல்லிவிட்டுப்போன
கள்ள நட்சத்திரம்

-சௌவி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக