சனி, 23 மே, 2020

மழையைக் கொணரும் குருவிகள்

மழையைக் கொணரும் குருவிகள்


கோடை வெயிலில்
காய்ந்து போன கிணறும்
வறண்டு போன குளமும்
தண்ணீரைத் தொலைத்திருக்க
தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த
என் மாடுகளுக்காக
கருவேலமரத்துக்
கற்றாழைக்குருவிகளிடத்து
உதவி கேட்டிருந்தேன்

உதவுவதாய்ச் சொல்லிவிட்டு
இரண்டு நாட்களுக்கு முன்னர்
வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்
இப்போது மேகங்களை
இழுத்துக்கொண்டு வருகின்றன
எம் கிணறுகளை நோக்கியும்
எம் குளங்களை நோக்கியும்

பருவமழை துவங்கிவிட்டதாய்
வானொலியிலும்
தொலைக்காட்சியிலும்
செய்தித்தாள்களிலும்
அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்

-சௌவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக