இயற்கையோடும் எலியோடும்..
திருச்சி வந்து சேர்ந்தபோது இரவு 7:50 ஆகியிருந்தது. எப்போதுமே புதுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கிப் பயணிக்கும் பயணம் சலிப்பைக் கூட்டுவதாகவே அமைகிறது. அதுவும் 1 to 1 பேருந்து கிடைக்காமல் வேறு வழியின்றி மற்ற பேருந்துகளில் பயணிக்கும்போது அது எல்லா நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டும், ஏற்றிக்கொண்டும் மெதுவாகவே செல்லும். 1 to 1 என்றால் ஒரு மணி நேரப்பயணம், மற்ற பேருந்துகளென்றால் திருச்சியை அடைய ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும். சாலையின் இரு மருங்கிலும் கண்ணைக் குளிப்பாட்டும் காட்சிகள் கிடைப்பதில்லை. எப்போதும் காய்ந்து கிடக்கும் புழுதிக்காடுகள், அப்புழுதிக்காடுகளில் எப்போதும் ஒரே நிறத்தில் நின்றுகொண்டிருக்கும் கருவேல மரங்கள் பயணத்தை சலிப்பான பயணமாக மாற்றிவிடும்.
எப்போதும்
எனக்கு நிறையப் பொருட்களை பேருந்துப் பயணத்தோடு கொண்டு செல்வது பிடிக்கவே பிடிக்காது. ஐந்து
நாட்களுக்கான
ஆடைகள் வேண்டுமென்பதால் பெரிய டிராவலர் பேக்கில் ஆடைகள் எடுத்துக்கொண்டோம். நம் பேருந்துகளில் பெரிய பேக்குகளை வைத்துக்கொண்டு பயணம் செய்வதற்கான சௌகரியங்கள் இருப்பதில்லை. புதுக்கோட்டையில் பேருந்து ஏறியதும் ஓட்டுனருக்கு இணையாக இருக்கும் ஒரு ஆள் அமரக்கூடிய இருக்கைக்கு அருகில் டிராவலர் பேக்கை வைத்துவிட்டு அதற்குப்பின்னுள்ள இரண்டு ஆட்கள் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துகொண்டோம். நடத்துனர் ஏறியதும் பேக்கை அங்கே வைக்க வேண்டாம் , இருக்கைக்கு அடியில் வைக்கவும் என்றார். நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கடியில் வைக்குமளவு இடமில்லையென்பதால்தான் அங்கே வைத்திருந்தோம். பிறகு மூன்று ஆட்கள் அமரக்கூடிய இருக்கைக்கடியில் படுக்கைவசமாகத் தள்ளிவிட்டு, உராய்ந்து உராய்ந்து பேக் கிழிந்துவிடுமோ என்ற ஐயப்பாடான மனதோடே பயணம் தொடர்ந்தது. இப்படித்தான் பேருந்து நடத்துனர்கள் தங்கள் அதிகாரங்களைக் காட்டி மற்றவர்களை சிரமப்படுத்தி , தாங்கள் அதிகாரம் மிக்கவர்கள் என மகிழ்ந்துகொள்வார்கள் சிறுபிள்ளைத்தனமாக. திருச்சி பேருந்து நிலையம் வந்ததும் எல்லோரும் இறங்கிய பிறகு பேக்கைப் பக்குவமாக வெளியே எடுத்து கடைசியாக இறங்கினோம் மனதுக்குள் நட்த்துனரைத் திட்டிக்கொண்டே.
இறங்கியதும் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி சாப்பிடுவதற்கு மதுரை முனியாண்டி விலாஸுக்குச் சென்றோம். இந்தக் கடையில் முட்டை புரோட்டா எனக்கு மிகப்பிடிக்கும். ஏற்கனவே நிறையமுறை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அச்சுவிற்கு இக்கடைக்கு வருவது இதுதான் முதல்முறை. வழக்கம்போல நான் முட்டை புரோட்டா ஆர்டர் செய்தேன், சிக்கன் சவர்மா ஆர்டர் செய்தாள் அச்சு. சவர்மா மிகவும் கெட்டியாக இருக்கிறதென்றும் நன்றாக இல்லையென்றும் பாதியை அப்படியே சாப்பிடாமல் வைத்துவிட்டாள் அச்சு. எப்போதும்போல முட்டை புரோட்டா எனக்குப்பிடித்திருந்தது. சவர்மா எனக்கும் பிடிக்கவில்லை, நல்ல கடினமாக இருந்தது.
சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து ரயில் நிலையம் அருகில் என்பதால் நடக்கத்தொடங்கினோம். ஆட்டோவில் செல்லலாம் என மனது நினைத்தாலும் ஆட்டோக்காரர்கள் கேட்கும் அநியாயத்தொகையை நினைத்து அந்த நினைப்பைத் துடைத்துக்கொண்டது மனது. நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நியாயமற்று அதிகப் பணத்தை வசூலிப்பது நிகழ்கிறது. நடந்து செல்லும்போது டிராவலர் பேக்கை உருட்டாமல் தூக்கிக்கொண்டே நடந்தேன். நல்ல தார்ச்சாலை என்றாலும் துப்பப்பட்ட எச்சில்களின் மிச்சங்களும், இன்னபிற கரைகளும் பேக்கை உருட்டுவதற்கு ஏதுவாக இல்லை. சுத்தமாகத்தெரிந்த இடங்களில் பேக்கை உருட்டிக்கொண்டும், துப்பல்களைக்கண்ட இடங்களில் தூக்கிக்கொண்டும் நடந்து ரயில் நிலையத்தை அடைந்தோம்.
ரயில் நிலையத்தின் அறிவிப்புப் பலகையிலிருந்து எங்களுக்கான ரயில் நான்காவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும் என்ற செய்தியை வாங்கிக்கொண்டு நான்காவது பிளாட்பாரத்தை அடைந்தோம். இன்னமும் ரயில் வந்திருக்கவில்லை. காத்திருந்தவர்களின் கூட்டம் சற்றே அதிகமென்றாலும் பிளாட்பாரத்தில் கட்டப்பட்டிருந்த மேடையொன்றில் உட்கார இடம் கிடைத்தது. பத்து நிமிடக் காத்திருப்புக்குப்பின் ரயில் வந்து சேர்ந்தது.
ரயிலில் ஏறியதும் எங்களுக்கான படுக்கைகள் கதவுக்கு அருகிலேயே இருந்தன. கதவுக்கு அருகிலிருக்கும் படுக்கைகள் எப்போதும் சிறு சங்கடத்தை ஏற்படுத்துபவை. கதவைத் திறப்பதும் மூடுவதுமான நிகழ்வு தூக்கத்தை இடையூறு செய்யும். நம்மூர் ரயில்களில் பெரும்பாலும் கதவுகள் திறக்கையிலும் மூடுகையிலும் சப்தமிட்டுக்கொண்டேயிருக்கும். ஒதுக்கப்பட்ட எண்களைப் பார்த்தபோது எங்களுக்கான படுக்கைகள் அப்பர் பெர்த்தும், மிடில் பெர்த்துமாயிருந்தது. எங்களுக்கருகில் மீதமிருந்த நான்கு பெர்த்துகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காயிருந்தது. அவர்கள் பேசிக்கொண்ட மொழியிலிருந்து அவர்கள் கன்னட மொழிக்காரர்கள் என அறிந்துகொள்ளமுடிந்தது. அச்சுவின்
அலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால் சார்ஜரை எடுத்து பிளக்கில் பொருத்தப்போனாள். அதைப்பார்த்துக்கொண்டிருந்த பிளக்கிற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அக்குடும்பத்தின் மூத்தபெண் அவள் மகளிடமிருந்து அவசர அவசரமாய் அலைபேசியையும் சார்ஜரையும் வாங்கி முந்திக்கொண்டு பிளக்கில் பொருத்தினாள். சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்ட்தைச் சொன்னபோது அவர்கள் அலைபேசியில் குறைவான சார்ஜ் இருப்பதாகவும் இரண்டு நிமிடங்கள் பயன்படுத்திக்கொள்வதாகவும் சொன்னாள். பிறகு இருபது நிமிடங்களுக்கு மேலாகியும் அவள் அலைபேசியைக் கழற்றவேயில்லை. எதிர்ப்புறமிருந்த பிளக் சார்ஜரைப் பொருத்தமுடியாதபடிக்கு உடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனுசரனையற்றவர்களாகவும் அன்பற்றவர்களாகவும் இருந்தார்கள்.
சில பயணங்களில் இப்படிப்பட்டவர்களோடு பயணம் செய்யவேண்டியதாகிவிடுகிறது. சைடு அப்பர் பெர்த்தில் சரீரம் பெருத்த ஒருவர் பெருத்த குறட்டை ஒலி எழுப்பி எழுப்பி கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்து கேலியோடும், கோபத்தோடும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவருடைய குற்ட்டை ஒலியும் அளவுக்கு மீறிய இடையூறாகவே இருந்தது. டிராவலர் பேக்கை கீழ் பெர்த்துக்கடியில் தள்ளிவைத்துவிட்டு மிடில் பெர்த்தில் அச்சுவும் , அப்பர் பெர்த்தில் நானும் படுத்துக்கொண்டோம். படுத்ததும் நன்றாகத் தூக்கம் வந்தது. அச்சு எனக்கு முன்பே உறங்கிவிட்டாள். சிறிது நேரம் அலைபேசியில் அலைந்துவிட்டு நானும் உறங்கத்தொடங்கினேன்.
உறங்கிக்கொண்டிருக்கையில் திடீரென விழிப்பு. சுற்றிலும் குறட்டை ஒலிகள் இரவை அறுத்துக்கொண்டிருந்தன. குறட்டை ஒலியோடு தூங்கிக்கொண்டிருந்தவரை ஏளனமாகப் பேசிய குடும்பத்தைச் சேர்ந்த நால்வருமே குறட்டை ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் ஏளனப்படுத்தப்பட்டவரைவிட அதிக சப்தங்களோடான குறட்டை ஒலிகளோடு இரவைக் காயப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அலைபேசியை எடுத்துப்பார்த்தேன், நேரம் 2:10 AM என்றது. தூங்க எத்தனித்தேன், குறட்டை ஒலிகள் தூங்கவிடாது செவிப்பறையில் ஆணியடித்தன. பெர்த்திலிருந்து இறங்கி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து பார்த்தேன். கோவை மாநகரத்தைக் கடந்துகொண்டிருந்தது ரயில்.
கொஞ்ச நாட்களுக்கு முன் வாழ்ந்த மாநகரம் நினைவுகளின்மீது பழைய நாட்களைப் போட்டு பாரமேற்றியது. பிடித்தமான மாநகரம், மிதமான குளிர்ந்த
சீதோஷ்ணநிலையை வருடமெல்லாம்
கொண்டிருக்கும்
மாநகரம். திருச்சியைப்போலவோ, சென்னையைப் போலவோ கொடும் வெயிலைக் காட்டாத மாநகரம். கோவை வாழிடமாகக் கிடைத்தால் நன்றாக இருக்குமென நினைத்தபடி மறுபடி பெர்த்திலேறிப் படுத்துக்கொண்டேன். குறட்டை ஒலிகளின் தாக்குதல்களால் தூக்கமே வரவில்லை. வேறு வழியில்லாமல் அலைபேசியில் அலைய ஆரம்பித்தேன். குறட்டை ஒலிகளின் தாக்கம் ஒரு கட்டத்தில் குறைய ஆரம்பித்ததும் தூங்கிப்போனேன்.
அச்சு கையால் என்னைத்தட்டி எழுப்பினாள். 5:30 ஆகிவிட்ட்து. 5:50 க்கு கோழிக்கோடு வந்துவிடுமென்றாள். பெர்த்திலிருந்து இறங்கி என்னைத் தயார் செய்துகொண்டு கீழ் பெர்த்துக்கடியிலிருக்கும் டிராவலர் பேக்கை எடுத்தேன், அதிர்ச்சியானேன். பேக்கின் ஒரு பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. யாராவது திருடன் பேக்கைக் கிழித்து பொருட்களை எடுத்துப்போய்விட்டானோ என்ற ஐயத்தோடும் அதிர்ச்சியோடும் அச்சுவிடம் கூறினேன். அச்சுவும் பெர்த்திலிருந்து அதிர்ச்சியோடு இறங்கி பேக்கின் கிழிசலைப் பார்த்து சோகமுற்றாள். பேக்கினுள் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்டுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன, கடித்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. இது எலியின் வேலை எனப் புரிந்தது. அலைபேசியின் விளக்கால் கீழ் பெர்த்துக்கடியில் வெளிச்சப்படுத்திப்பார்க்க தின்று போடப்பட்ட பிஸ்கட் கவர்கள் கிடந்தன. முப்பது பிஸ்கட் பாக்கெட்டுக்களில் இருபது பாக்கெட்டுக்களை காலி செய்துபோட்டிருந்தது வந்து போன பெருச்சாளி. குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிக்குள் எலி எப்படி வந்ததென்று யோசித்துக்கொண்டிருக்கையில் , டி.டி.ஆரிடம் புகார் சொல்லி அவரை அழைத்து வந்தாள் அச்சு.
பேக்கின் கிழிசலைப் பார்த்த டி.டி.ஆர், இது எலியின் வேலைதான் என்றார். பேக்கைச் சரிசெய்யும்பொருட்டு பேக்கின் கிழிசல் பகுதியைச் சேர்த்துப் பிடித்தபடி , ஜிப்பைச் சரியாகப் பொருத்த முயற்சித்தார். எதிர் பெர்த்திலிருந்த ஒருவர் , குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் புகுந்து எலிகள் இப்படி பயணிகளின் உடைமைகளைக் கடித்து சேதப்படுத்துமளவுக்கு உள்ளது ரயில்வே நிர்வாகம், இவ்வளவுதான் இவர்களின் பாதுகாப்பு என்றபடி டி.டி.ஆரைப் பார்த்தார். டி.டி.ஆர் பேக்கின் ஜிப்பைச் சரி செய்வதிலேயே கவனமாக இருந்தார். அவரிடமிருந்த சாவி கொண்டு ஜிப்பின் வாயை வளைத்து , அவருடைய பங்குக்கு ஜிப்பை சரிசெய்து கொடுத்தார். ஆனால் எலி பேக்கை முழுவதுமாக மூடமுடியாதபடிக்கு கடித்துக் கிழித்திருந்தது. உள்ளே வைத்திருக்கும் பொருட்கள் வெளியே விழாமல் கொண்டு செல்லமுடியாதெனத் தெரிந்தது. கிழிசல் வழியாகப் பொருட்கள் தெரிந்தன. எப்படி பேக்கை எடுத்துப்போவதென யோசித்துக்கொண்டிருக்கையில் இறங்குமிடம் வந்த்விட்டது. டி.டி.ஆர் ஸ்டேசன் மாஸ்டரிடம் புகாரளிக்கச் சொன்னார். அவருக்கு நன்றி கூறிவிட்டு கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இறங்கி , பொருட்கள் கிழிசல் வழி வெளியே விழுந்துவிடாது கவனமாக பேக்கை உருட்டிக்கொண்டும் தூக்கிக்கொண்டும் ஸ்டேசன் மாஸ்டரின் அறைக்கு நடந்தோம்.
ஸ்டேசன் மாஸ்டரிடம் பேக்கைக் காட்டி நடந்ததை விவரித்தோம். இரண்டு நாட்களுக்கு முன்பாக இதே அறையில் வைத்திருந்த தன்னுடைய அலைபேசியைக் கடித்து சேதப்படுத்தியதாகவும், தன் சக பெண் ஊழியர் ஒருவரின் கைப்பையை முழுவதும் கடித்துக் குதறிவிட்ட்தாகவும் எலிகளோடான தன்னுடைய சமீபத்திய அனுபவங்களைப் பகிர்ந்தவர், புகார்ப்புத்தகத்தை நீட்டி , வேண்டுமானால் புகார் எழுதிக்கொடுங்கள் என்றவர், இப்புகாரால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்றார். ஸ்டேசன் மாஸ்டரிடம் இரண்டு கிளிப்புகளை வாங்கி, பேக்கின் கிழிசலை இணைத்து மாட்டிக்கொண்டு, புகார் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். இந்தப் புகாருக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. நம்முடைய ரயில்வேயில் பாதுகாப்பு என்பது இந்த அளவுக்குத்தானிருக்கிறது. பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பில்லை, நாமே கண்ணுங் கருத்துமாக பாதுகாத்துக்கொண்டால்தான் உண்டு. எலியால் கிழிந்துபோன பேக்கும், அதனால் உண்டான அனுபவங்களுமே மிச்சம்.
காலை ஆறு மணி ஆகியிருந்தது. கோழிக்கோடு மாநகரம் மெல்ல மெல்ல வெளிச்சமாகிக்கொண்டிருந்தது.ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் பயணித்தோம். தொடர்ச்சியாய்
மழை பெய்துகொண்டிருந்தது. மழையில் நனைந்து ஈரமாயிருந்த சாலைகள் பேரழகாயிருந்தன. முழுவதுமாய் நனைந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்த மரங்களும் செடிகளும் , அத்தனை களைப்பையும் , அத்தனை கோபத்தையும் துடைத்து மனசுக்குள் உற்சாகத்தை எழுதின. பெய்துகொண்டேயிருந்த மழை மனதை நனைத்துக் குளிர்வித்தது. பேருந்து நிலையத்தை அடைந்து சாகரில் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு கல்பெட்டா செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தோம். மழை ஒரே மாதிரியாகப் பெய்துகொண்டேயிருந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் பயணிக்கவேண்டும் கல்பெட்ட சென்று சேர. மலையின் மேலேறி வளைந்து வளைந்து செல்லும் பேருந்துப்பயணத்தை நினைத்து வெகுவாய் உற்சாகம் கொண்டது மனது. அதுவும் மேகங்கள் மூடிய மலைகளையும், பெய்யும் மழையால் மலைகளின் மேனியெங்கெங்கும் தோன்றி விழும் அருவிகளையும் காணக் கண்கோடி வேண்டும். மலையில் மேலேறும் பயணத்தை நினைத்து ஆன்ந்தப்பட்டன கண்களும் மனதும். பேருந்து புறப்பட்டு நகரத்தொடங்கியது, தன் துவட்டப்படாத ஈர அழகால் மனசெங்கும் மழையைப் பொழிய ஆரம்பித்த கோழிக்கோடு நகரத்துச் சாலைகளில்.
-சௌவி
08.09.2019