http://www.vasagasalai.com/tamil-poems-sowvi/
சனி, 4 ஜூலை, 2020
சனி, 23 மே, 2020
மழையைக் கொணரும் குருவிகள்
மழையைக் கொணரும் குருவிகள்
கோடை வெயிலில்
காய்ந்து போன கிணறும்
வறண்டு போன குளமும்
தண்ணீரைத் தொலைத்திருக்க
தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த
என் மாடுகளுக்காக
கருவேலமரத்துக்
கற்றாழைக்குருவிகளிடத்து
உதவி கேட்டிருந்தேன்
உதவுவதாய்ச் சொல்லிவிட்டு
இரண்டு நாட்களுக்கு முன்னர்
வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்
இப்போது மேகங்களை
இழுத்துக்கொண்டு வருகின்றன
எம் கிணறுகளை நோக்கியும்
எம் குளங்களை நோக்கியும்
பருவமழை துவங்கிவிட்டதாய்
வானொலியிலும்
தொலைக்காட்சியிலும்
செய்தித்தாள்களிலும்
அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்
-சௌவி
வியாழன், 14 மே, 2020
இழப்பின் தேடல்
இழப்பின் தேடல்
ஒரு குரங்கு
இன்னொரு குரங்கிற்கு
பேன் பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒரு குரங்கு
தன் குழந்தைக்குப்
பாலூட்டிக்கொண்டிருக்கிறது
இரண்டு குட்டிக்குரங்குகள்
நிறுத்தப்பட்டிருக்கும்
காரின் மேல் புரண்டு விழுந்து
குதித்து
விளையாடிக்கொண்டிருக்கின்றன
சில குரங்குகள்
வேப்ப மரத்திலிருந்து
வீட்டின் மேல் தாவுவதும்
வீட்டின் மேலிருந்து
வேப்ப மரத்துக்குத் தாவுவதுமாய்
சாகசங்களை
நிகழத்திக்கொண்டிருக்கின்றன
சில குரங்குகள்
பார்வையாளர்களாக மாறி
வீடுகளின் சுற்றுச்சுவர்களின்
மேலமர்ந்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன
வனத்தை அழித்த மனிதர்கள்
வீட்டுக்கதவுகளைச் சாத்திக்கொண்டு
பட்டாசு வெடித்தும்
விநோதச் சப்தங்களை எழுப்பியும்
குரங்குகளை விரட்டுகிறார்கள்
வனமிழந்த குரங்குகள்
மனிதர்களைச் சபித்தபடி
சிதறி ஓடுகின்றன
தங்களுடைய வனம் வேண்டுமென
-சௌவி
செவ்வாய், 12 மே, 2020
கேள்விகளற்றவன்
கேள்விகளற்றவன்
பறக்கச் சிறகுகளிருந்தும்
போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையை
தத்தித் தத்தி நடந்து கடக்கும்
காகத்திடம்-
பளிச்சென மிக அழகாய்
எல்லாக்குப்பைகளையும் கூட்டிய பின்னரும்
கொஞ்சநேரம்கூட அச்சுத்தத்தைப் பேணுவோமென்ற
பிரக்ஞையின்றி
உடனே இலைகளை உதிர்க்கத்
துவங்கியிருக்கும் மரத்திடம்-
மரத்திலிருந்து இறங்கி வந்து
பயந்து பயந்து
மரத்தடிக் கடையில் இட்லியைக்
கொரித்துக்கொண்டு ஓடும் அணிலைத்
தடுக்காத பாட்டியிடம்-
யாருடைய அவசரத்தைப் பற்றியும்
கவலைப்படாமல்
எந்த வாகனச் சப்தத்துக்கும் பயப்படாமல்
சாலை நடுவில் தவறி விழுந்திருக்கும்
வைக்கோல் கற்றையை
உதறியபடி தின்றுகொண்டிருக்கும்
மடி கனத்த பசுவிடம்-
சீரான இடைவெளியில்
ஒவ்வொரு வாகனத்தையும்
சிறிது தூரம் துரத்தித் துரத்தித்
தன்நிலை திரும்பும் நாயிடம்-
ஏன் என்ற கேள்விகேட்க
என்னிடம் எந்தக் கேள்வியுமில்லை
நான் கேள்விகளற்றவன்
-சௌவி
நிராகரிப்பு
நிராகரிப்பு
நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
அழுதுவிட்டு அமைதியாகிறது
அமைதியாயிருந்துவிட்டு
மறுபடி அழத்தொடங்குகிறது
நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
வசை வார்த்தைகளைக் கொண்டு
சபிக்கிறது
நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
வன்மத்தின் விதையொன்றை
நட்டு வளர்க்க ஆரம்பிக்கின்றது
நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
திமிரின் இலக்கணங்களைக்
கற்றுக்கொள்ளத் துவங்குகிறது
நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
அலட்சியத்தின் ருசியையும்
ஆணவத்தின் ருசியையும்
கைகளுக்குச் சொல்லிக்கொடுக்க
ஆரம்பிக்கிறது
நீங்கள் நிராகரித்துவிட்ட வணக்கமொன்று
உங்களை நிராகரிப்பதற்காக
சரியான சந்தர்ப்பமொன்றைத் தேடியபடியே
உங்கள் பின்னால் வந்துகொண்டிருக்கிறது
-சௌவி
தொடர்பு
தொடர்பு
காலையில் எழுந்து
நடைப்பயிற்சிக்கோ தோட்டத்துக்கோ
நடந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள்
மரமொன்று தன் ஈர இலைகளால்
புன்னகைத்து
உங்கள் நாளைத் துவக்கி வைக்கிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
தண்ணீர்கூட ஊற்றியதில்லை
பதட்டமாக
எங்கோ சென்றுகொண்டிருக்கிறீர்கள்
வழியோர மரமொன்று
தன் விரல்களெங்கும் ஏந்திக்கொண்டிருக்கும் மலர்களால்
உங்கள் மனசை நீவி நீவி
உங்களை ஆசுவாசப்படுத்துகிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
எந்த உதவியும் செய்ததில்லை
வெயில் தாங்கமுடியால்
வியர்வை வழிய
நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்
நிழலை நீட்டி வரவேற்கும் மரமொன்று
உங்களை நிறுத்தி
உங்கள் வியர்வைத் துளிகளைத்
துடைத்துவிடுகிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
ஆகாரமெதுவும் கொடுத்ததில்லை
களைப்போடு
எங்காவது இளைப்பாறலாம்
என நினைக்கிறீர்கள்
மரமொன்று தன் மடியிலேந்தி
உங்களைத் தாலாட்டி
உறங்க வைக்கிறது
அந்த மரத்தை
நீங்கள் நட்டதில்லை
சம்பந்தமில்லாதவர்களாலேயே
கட்டமைக்கப்படுகிறது
வாழ்வின் பெரும்பங்கு
ஒவ்வொருவருக்கும்
-சௌவி
மாலை முத்தம்
மாலை முத்தம்
கற்றாழையின் கூர் முனையில்
நின்றுபார்த்துவிட்டுக் கீழிறங்கும்
எறும்பொன்றின் கால்களைப்பற்றிக்கொள்ள நினைக்கும் கற்றாழையால்
முடியவில்லை
எறும்பின் கால்களைக் கட்டுப்படுத்த
மாலை நேரத்து
மஞ்சள் சூரியனிடமிருந்து
தன் நிழலை எடுத்து
வெள்ளாமைக் காட்டில்
விளைந்து நிற்கும் பயிர்களுக்கு
வலிக்காமல்
பரப்பி வைத்திருக்கிறது
பொழியோரக் கருவேலமரமொன்று
கருவேலமரக் கிளைகளெங்கும்
இசைக்குறிப்புகளைத் தொங்கவிட்டிருக்கும்
கற்றாழைக்குருவிகளின்
பாடலைக் கேட்டு ரசித்தபடி
நகராமல் நின்றுவிட்ட சூரியனைப்
பிடித்துக் கீழே இழுக்கிறது
நீலச்சேலைகட்டி அமர்ந்திருக்கும் மலை
கற்றாழையில் இறங்கிக்கொண்டிருக்கும் எறும்பையும்
பாடலிசைக்கும் கற்றாழைக்குருவிகளையும்
பார்த்தபடி மலரும்
அந்தி நட்சத்திரமொன்று
அவசர அவசரமாய் இறங்கி வந்து
என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு
வானம் தேடுமெனச் சொல்லிவிட்டு
ஓடுகிறது
பாலைக்குடித்துவிட்டு
கிணற்று மேட்டுக்கு ஓடிய
கன்றுக்குட்டியைப் பிடிக்க ஓடுகிறேன்
கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருக்கிறது
வானத்துக்குப் போவதாய்ச்
சொல்லிவிட்டுப்போன
கள்ள நட்சத்திரம்
-சௌவி
பொறுமை
பொறுமை
உங்களாலும் என்னாலும்
அவ்வளவு
பொறுமையாக இருக்கமுடியாது
என்ன நடந்தபோதும்
எங்கேயும் எழுந்துபோகாமல்
இருந்த இடத்திலேயே
உட்கார்ந்துகொண்டிருக்கும்
மலைகளைப்போல
பொறுமையுடையவர்கள் யாரும் இல்லைதான்
மலைகள் எழுந்து நடந்துபோக ஆரம்பித்தால்
பூமியில் அதிகாரம் மிகுந்தவைகளாக
மலைகள்தான் இருக்கக்கூடும்
மலைகளை எதிர்த்து நிற்கும் பலம்
யாருக்குமில்லை
மலையின் மீது வெயிலடிக்கிறது
மலையின் மீது மழை பொழிகிறது
மலையினை வெட்டி வெட்டி
பாதை அமைக்கிறார்கள்
மலையை உடைத்து உடைத்துக்
கற்களாக்கி விற்கிறார்கள்
மலைக்குள் குழி தோண்டி
வெடி வைத்துப் பிளக்கிறார்கள்
என்ன செய்தபோதும்
திருப்பி எதிர்க்காமல்
எப்படி
இப்படிப் பொறுமையாக இருக்கமுடிகிறது இந்த மலைகளால்?
நினைக்க நினைக்க
விரியும் ஆச்சர்யத்தைக் கடந்து
அதற்கப்பால் போக முடியவில்லை
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்
மலைகளெல்லாம்
நடந்துபோவதாகவும்
மலைகள் மாநாடு கூட்டுவதாகவும்
ஒரு நாட்டின் மலைகளுக்கும்
இன்னொரு நாட்டின் மலைகளுக்குமிடையே
சண்டை ஏற்பட்டுத்
தாக்கிக்கொண்டதாகவும்
அப்பப்பா..
பயங்கரமாக இருந்தது கனவு
காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று
சன்னலைத் திறந்துபார்த்தேன்
தூரத்திலிருந்த மலை
எங்கேயும் போகாமல்
அங்கேயே நின்றுகொண்டு
எனைப் பார்த்துப் புன்னகைத்தது
-சௌவி
தூக்கம்
தூக்கம்
நேற்று மதியம் நான்
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்கிக்கொண்டிருந்தேன்
இரண்டு நாட்களுக்குமுன் ஊருக்குப் போன நீ
திரும்பி வந்து
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதைப் பார்த்து
கோபித்துக்கொண்டாய்
யாருக்குத்தான் கோபம் வராது?
இதுபோன்ற சூழலில் கோபம் வரவேண்டும்
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்கிக்கொண்டிருந்தேன்
இரண்டு நாட்களுக்குமுன் ஊருக்குப் போன நீ
திரும்பி வந்து
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதைப் பார்த்து
கோபித்துக்கொண்டாய்
யாருக்குத்தான் கோபம் வராது?
இதுபோன்ற சூழலில் கோபம் வரவேண்டும்
சின்ன வயதில் அம்மாவைக் கட்டிப்பிடித்தே
தூங்குவது வழக்கம்
அம்மாவைக் கட்டிப்பிடித்துப் படுத்தபின்தான்
தூக்கமே வரும்
எப்போது உறங்குகிறேனெனத் தெரியாமலே
தூங்கிவிடுவேன்
தூங்குவது வழக்கம்
அம்மாவைக் கட்டிப்பிடித்துப் படுத்தபின்தான்
தூக்கமே வரும்
எப்போது உறங்குகிறேனெனத் தெரியாமலே
தூங்கிவிடுவேன்
கொஞ்சம் வளர்ந்தபிறகு
அம்மாவிடமிருந்து தனியாகப் படுக்க ஆரம்பித்தபின்
கொஞ்சநாட்கள் கட்டிப்பிடித்தலின்றித்தான்
தூங்கிக்கொண்டிருந்தேன்
அது ஓர் அந்திப் பொழுதில்
மிகப் பெரியதாய் கிழக்கு வானில் பூத்துவந்த
பௌர்ணமி நிலவைப் பார்க்கும்வரைதான்
அன்றுதான் காதலின் மலரொன்று
என் மனக்காட்டில் அவ்வளவு வாசத்தோடு பூத்தது
அன்றிரவு நிலவைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்கினேன்
அம்மாவிடமிருந்து தனியாகப் படுக்க ஆரம்பித்தபின்
கொஞ்சநாட்கள் கட்டிப்பிடித்தலின்றித்தான்
தூங்கிக்கொண்டிருந்தேன்
அது ஓர் அந்திப் பொழுதில்
மிகப் பெரியதாய் கிழக்கு வானில் பூத்துவந்த
பௌர்ணமி நிலவைப் பார்க்கும்வரைதான்
அன்றுதான் காதலின் மலரொன்று
என் மனக்காட்டில் அவ்வளவு வாசத்தோடு பூத்தது
அன்றிரவு நிலவைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்கினேன்
பிறகு
சில நாட்கள் மலையைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நட்சத்திரத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் மேகத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நதியைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் வானவில்லைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் கடலைக் கட்டிப்பிடித்தபடி
தூங்குவது வழக்கமாகிப்போனது
இவ்வெவற்றாலும் என்னை சமாதனப்படுத்தமுடியாத
சமயத்தில்
அம்மாவைக் கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்துக்கொள்வேன்
அம்மா தரும் ஆசுவாசத்தைப் போலவோ
ஆறுதலைப்போலவோ
யாராலும் தந்துவிட முடியாதுதான்
சில நாட்கள் மலையைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நட்சத்திரத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் மேகத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நதியைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் வானவில்லைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் கடலைக் கட்டிப்பிடித்தபடி
தூங்குவது வழக்கமாகிப்போனது
இவ்வெவற்றாலும் என்னை சமாதனப்படுத்தமுடியாத
சமயத்தில்
அம்மாவைக் கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்துக்கொள்வேன்
அம்மா தரும் ஆசுவாசத்தைப் போலவோ
ஆறுதலைப்போலவோ
யாராலும் தந்துவிட முடியாதுதான்
இப்படிக் கட்டிப்பிடித்துத் தூங்குவது
அடிக்கடி மாறிக்கொண்டிருந்தாலும்
உன்னைப் பார்த்த நாளிலிருந்து
உனக்குத் தெரியாமலே உன்னைக் கட்டிப்பிடித்து
தூங்க ஆரம்பித்துவிட்டேன்
இதை உன்னிடம் சொன்னபோது
அன்றும் இப்படித்தான் கோபித்துக்கொண்டாய்
அடிக்கடி மாறிக்கொண்டிருந்தாலும்
உன்னைப் பார்த்த நாளிலிருந்து
உனக்குத் தெரியாமலே உன்னைக் கட்டிப்பிடித்து
தூங்க ஆரம்பித்துவிட்டேன்
இதை உன்னிடம் சொன்னபோது
அன்றும் இப்படித்தான் கோபித்துக்கொண்டாய்
உன்னைக் கட்டிப்பிடித்துத் தூங்க ஆரம்பித்ததிலிருந்து
எனக்கு நிலா நட்சத்திரம் வானவில் நதி அருவி
கடல் என எல்லாமே நீயாகிப்போனாய்
நீ ஊருக்குப் போய்விடும் நாட்களில்
உன்னை நிலவாக்கியோ நட்சத்திரமாக்கியோ
கடலாக்கியோ நதியாக்கியோ
கட்டிப்பிடித்துத் தூங்கப் பழகிவிட்டேன்
எனக்கு நிலா நட்சத்திரம் வானவில் நதி அருவி
கடல் என எல்லாமே நீயாகிப்போனாய்
நீ ஊருக்குப் போய்விடும் நாட்களில்
உன்னை நிலவாக்கியோ நட்சத்திரமாக்கியோ
கடலாக்கியோ நதியாக்கியோ
கட்டிப்பிடித்துத் தூங்கப் பழகிவிட்டேன்
நேற்றும் அப்படித்தான்
உன்னை நிலவாக்கி கட்டிப்பிடித்துத்
தூங்கிக்கொண்டிருந்தேன்
ஊரிலிருந்து வந்த நீ
பார்த்தவுடன் கோபித்துக்கொண்டாய்
பிறகு அந்த நிலவை உன்னிடமே கொடுத்து
பார்க்கச்சொன்னேன்
வெகு நேர ஆராய்ச்சிக்குப்பிறகு
நிலா நீதானெனத் தெரிந்தபிறகு
அவ்வளவு சந்தோஷப்பட்டாய்
உன்னை நிலவாக்கி கட்டிப்பிடித்துத்
தூங்கிக்கொண்டிருந்தேன்
ஊரிலிருந்து வந்த நீ
பார்த்தவுடன் கோபித்துக்கொண்டாய்
பிறகு அந்த நிலவை உன்னிடமே கொடுத்து
பார்க்கச்சொன்னேன்
வெகு நேர ஆராய்ச்சிக்குப்பிறகு
நிலா நீதானெனத் தெரிந்தபிறகு
அவ்வளவு சந்தோஷப்பட்டாய்
இப்போது உன்னை நட்சத்திரமாக்கிக் காட்டு
கடலாக்கிக் காட்டு
நதியாக்கிக் காட்டு
எனக்கேட்டு என்னைத் தொல்லைசெய்ய
ஆரம்பித்துவிட்டாய்
உன்னை நீயாகவே கட்டிப்பிடிப்பதுதான்
எனக்கு மிகப்பிடிக்குமடி
கடலாக்கிக் காட்டு
நதியாக்கிக் காட்டு
எனக்கேட்டு என்னைத் தொல்லைசெய்ய
ஆரம்பித்துவிட்டாய்
உன்னை நீயாகவே கட்டிப்பிடிப்பதுதான்
எனக்கு மிகப்பிடிக்குமடி
-சௌவி
பறவை
பறவை
கடலைத் தாண்டி வந்த பறவை
ஒரு சிறகால் வானத்தையும்
இன்னொரு சிறகால்
கடலையும் வென்றிருந்தது
எந்தச் சிறகு கடலை வென்றது
எந்தச் சிறகு வானத்தை வென்றது
எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை
இரண்டுக்கும் நீல நிறம்
எந்தச் சிறகு வானத்தை வென்றது
எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை
இரண்டுக்கும் நீல நிறம்
இரண்டு சிறகுகளிலும்
தண்ணீரிருக்கிறது
இரண்டு சிறகுகளிலும்
அலையிருக்கிறது
இரண்டு சிறகுகளிலும்
காற்றிருக்கிறது
தண்ணீரிருக்கிறது
இரண்டு சிறகுகளிலும்
அலையிருக்கிறது
இரண்டு சிறகுகளிலும்
காற்றிருக்கிறது
எது வானத்தை வென்றது?
எது கடலை வென்றது?
எனக் கண்டுபிடிக்க முடியவில்லை
எது கடலை வென்றது?
எனக் கண்டுபிடிக்க முடியவில்லை
கடலைப் பார்த்தேன்
கடலுக்குள் வானம் தெரிந்தது
வானத்தைப் பார்த்தேன்
வானத்தில் கடல்
நடந்துபோய்க்கொண்டிருந்தது
கடலுக்குள் வானம் தெரிந்தது
வானத்தைப் பார்த்தேன்
வானத்தில் கடல்
நடந்துபோய்க்கொண்டிருந்தது
-சௌவி
புதன், 8 ஏப்ரல், 2020
வாழ்க்கை
***வாழ்க்கை*****
வதவதவென ஆறேழு குட்டிகள்
பாலூட்டிக்கொண்டிருக்கிறது தாய் நாய்
இரு சக்கர வாகனத்தில் கடக்குமென்னை
முறைத்துப்பார்க்கிறது
பயத்தோடே மெதுவாய்க் கடக்கிறேன்
நேற்று வேகமாகச் சென்றபொழுது
வீதிமுனை வரை விடாது துரத்தி வந்தது
என் வீட்டுக்குச் செல்ல
இருக்கும் ஒரே வீதி இதுதான்
யாராவது நகராட்சி ஆட்கள் வந்து
பிடித்துச்செல்வார்களா எனப்பார்க்கிறேன்
நடக்கவில்லை
குட்டிகள் துரத்திக்கொண்டு விளையாடுகின்றன
ஒன்றையொன்று கடித்துக்கொண்டு விளையாடுகின்றன
போக்குவரத்து அதிகமற்ற இந்த வீதி
குட்டிகளை ஈனி வளர்க்க
நல்ல சௌகரியமாகப் போய்விட்டது நாய்க்கு
நானும் மெதுவாய்க் கடந்து பழகிக்கொண்டேன்
வேகமாக ஓட்டினால்தானே துரத்திக்கொண்டு
கடிக்க வரும்
அத்தனை குட்டிகளும் அம்மா நாயும்
அத்தனை பாசத்தோடு விளையாண்டுகொண்டிருக்கின்றன
நாளை தாயும் குட்டியுமோ அல்லது
ஒரு குட்டி மற்றொரு சகோதரக்குட்டியையோ
இதே நகரத்தின் ஏதேனுமொரு வீதியில்
எதிரியாகச் சந்திக்கலாம்
பாலூட்டிக்கொண்டிருக்கிறது தாய் நாய்
இரு சக்கர வாகனத்தில் கடக்குமென்னை
முறைத்துப்பார்க்கிறது
பயத்தோடே மெதுவாய்க் கடக்கிறேன்
நேற்று வேகமாகச் சென்றபொழுது
வீதிமுனை வரை விடாது துரத்தி வந்தது
என் வீட்டுக்குச் செல்ல
இருக்கும் ஒரே வீதி இதுதான்
யாராவது நகராட்சி ஆட்கள் வந்து
பிடித்துச்செல்வார்களா எனப்பார்க்கிறேன்
நடக்கவில்லை
குட்டிகள் துரத்திக்கொண்டு விளையாடுகின்றன
ஒன்றையொன்று கடித்துக்கொண்டு விளையாடுகின்றன
போக்குவரத்து அதிகமற்ற இந்த வீதி
குட்டிகளை ஈனி வளர்க்க
நல்ல சௌகரியமாகப் போய்விட்டது நாய்க்கு
நானும் மெதுவாய்க் கடந்து பழகிக்கொண்டேன்
வேகமாக ஓட்டினால்தானே துரத்திக்கொண்டு
கடிக்க வரும்
அத்தனை குட்டிகளும் அம்மா நாயும்
அத்தனை பாசத்தோடு விளையாண்டுகொண்டிருக்கின்றன
நாளை தாயும் குட்டியுமோ அல்லது
ஒரு குட்டி மற்றொரு சகோதரக்குட்டியையோ
இதே நகரத்தின் ஏதேனுமொரு வீதியில்
எதிரியாகச் சந்திக்கலாம்
-சௌவி
கோடை மழை
****கோடை மழை*****
கோடையில் பெய்யுமொரு
மழையின் வாசம்
மனசுக்குள் கிளர்த்திவிடுகிறது
மேகங்களின் ஊர்வலத்தை
கான்கிரீட் சமாதிகளாகிப்போன
கிராமத்துப் பழைய வீதிகளின்
மண் வாசத்தை
ஆரம்பப்பள்ளியின் சந்திரா டீச்சர்
வைத்துக்கொள்ளச்சொல்லிக் கொடுத்த
ஆரஞ்சு நிறக்குடையை
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைக்கு
பாத்திரங்கள் பரிசளித்ததை
காரை வாசலின் ஈரத்தில்
வழுக்கி விழுந்து தாடையுடைந்த வலியை
சாக்கு முக்காடிட்டுக்கொண்டு
தட்டக்காட்டில் அம்மாவோடு
காய் பறித்த நாட்களை
வாங்கி வைத்திருந்த பட்டாசுகளெல்லாம்
வாய்திறக்காது மௌனித்த தீபாவளியொன்றை
நனைந்துகொண்டே அப்பாவின் சைக்கிளில்
ஆஸ்பத்திரி சென்ற அவசரத்தை
பள்ளம் நிரம்பியோடிய வெள்ளம்பார்த்தெழும்பிய அச்சத்தை
கடக்கமுடியாத வெள்ளமென
பொய்யுரைத்த விடுமுறைகளை
ஈசல் பொறுக்கிய வீதி விளக்குகளின்
வெள்ளை வெளிச்சத்தை
புத்தகப்பை நனைந்து
அப்பாவிடம் வாங்கிய அடிகளை
ரயில் பயணம் துவங்காத
மெட்ரோ பாதைக்கடியில்
அச்சுவோடு நடந்துபோனதை
புதிதாய் அணிந்த வெள்ளைச்சட்டையில்
பேருந்தின் சக்கரங்கள் வரைந்த
சேற்றோவியங்களை
மழையின் வாசம்
மனசுக்குள் கிளர்த்திவிடுகிறது
மேகங்களின் ஊர்வலத்தை
கான்கிரீட் சமாதிகளாகிப்போன
கிராமத்துப் பழைய வீதிகளின்
மண் வாசத்தை
ஆரம்பப்பள்ளியின் சந்திரா டீச்சர்
வைத்துக்கொள்ளச்சொல்லிக் கொடுத்த
ஆரஞ்சு நிறக்குடையை
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைக்கு
பாத்திரங்கள் பரிசளித்ததை
காரை வாசலின் ஈரத்தில்
வழுக்கி விழுந்து தாடையுடைந்த வலியை
சாக்கு முக்காடிட்டுக்கொண்டு
தட்டக்காட்டில் அம்மாவோடு
காய் பறித்த நாட்களை
வாங்கி வைத்திருந்த பட்டாசுகளெல்லாம்
வாய்திறக்காது மௌனித்த தீபாவளியொன்றை
நனைந்துகொண்டே அப்பாவின் சைக்கிளில்
ஆஸ்பத்திரி சென்ற அவசரத்தை
பள்ளம் நிரம்பியோடிய வெள்ளம்பார்த்தெழும்பிய அச்சத்தை
கடக்கமுடியாத வெள்ளமென
பொய்யுரைத்த விடுமுறைகளை
ஈசல் பொறுக்கிய வீதி விளக்குகளின்
வெள்ளை வெளிச்சத்தை
புத்தகப்பை நனைந்து
அப்பாவிடம் வாங்கிய அடிகளை
ரயில் பயணம் துவங்காத
மெட்ரோ பாதைக்கடியில்
அச்சுவோடு நடந்துபோனதை
புதிதாய் அணிந்த வெள்ளைச்சட்டையில்
பேருந்தின் சக்கரங்கள் வரைந்த
சேற்றோவியங்களை
மழை எப்போதும்
மழையை மட்டுமே பொழிவதில்லை
மழையை மட்டுமே பொழிவதில்லை
-சௌவி
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020
என்மேல் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி
என்மேல்
வந்தமர்ந்த பட்டாம்பூச்சி
-சௌவி
அன்றாடம் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள். என்ன
நிகழ்ந்தாலும் உலகம் அதுபாட்டுக்குச் சுழன்றுகொண்டேயிருக்கிறது இரவையும் பகலையும் சீரான
இடைவெளியில் மாறி மாறிக் காட்டியபடி. ஒரு தொழிற்சாலை செல்பவனுக்கு காலை எழுதல், கடன்கள்
முடித்தல், காலை உணவு, அலுவலகத்துக்கான பயணம், அலுவலகத்து வேலை, ஒரு தேநீர், மறுபடி
வேலை, மதிய உணவு, மறுபடி வேலை, மறுபடி ஒரு தேநீர், மறுபடி வேலை, வேலை முடிந்தவுடன்
வீட்டை நோக்கிய பயணம், குடும்பத்துடன் சிறிது நேரம், இரவுச் சாப்பாடு, தொலைக்காட்சி,
உறக்கம் என்றாகிப்போன இயந்திர வாழ்வு. இதுபோலத்தான் ஒரு ஆசிரியனுக்கும், ஒரு விவசாயிக்கும்
சற்றே மாற்றி எழுதப்பட்ட ஆனால் தொடர் நிகழ்வுகளாலான இயந்திர வாழ்வு. வாழ்வை இயந்திர
வாழ்வெனக் கடந்து செல்பவர்கள் அப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறார்கள் எப்போதும். இந்த
வாழ்வின் பெருஞ்சலிப்புகளுக்கிடையே, தன் மனத்தை சற்றே விலக்கி மலைகளை, அவ்வப்போது பெய்யும்
மழையை, வண்ணத்துப்பூச்சியை, குழந்தையின் சிரிப்பை, பாதையோரத்து மரத்தின் புன்னகையை,
அம்மரத்தில் பூத்திருக்கும் ஈரமான பூக்களை, சாலையில் குறுக்கிடும் நதியை ரசிப்பவனே
ரசிகனாகிறான். ரசித்துவிட்டு மறக்காமல் தன்னோடு எடுத்துச்சென்று மறுபடி மறுபடி மனசுக்குள்
பார்த்து ரசிப்பவனே கவிஞனாகிறான். அத்தகு ஒரு கவிஞன் சாமி கிரிஷ்.
சாமி கிரிஷ்ஷின் பட்டாம்பூச்சியின் புகைப்பட
ப்ரியங்கள் கவிதைத் தொகுப்பை கடந்த ஐந்து நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்து முடித்தேன்.
நாம் சாதாரணமாய்க் கடந்துபோகும் எல்லா நிகழ்வுகளிலுமே கவிதையைக் கண்டெடுக்கும் சாமிகிரிஷ்ஷின்
கவிதை மனதை என்னவென்று சொல்ல..! இந்தப் புத்தகத்திலுள்ள எல்லாக் கவிதைகளுமே நாம் அன்றாடம்
கடந்து போகின்ற நிகழ்வுகளில் நமக்குப் பார்க்கத் தெரியாத கவிதை நிமிடங்கள். எந்த நிகழ்வென்றாலும்
அதற்குள் ஒரு கவிதை ஒளிந்திருப்பதைக் கண்டெடுக்கும் கவிதைக் கண்கள் சாமிகிரிஷ்ஷுக்கு.
இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே மிகச் சிறப்பு.
எந்த ஒரு கவிதையையும் இது சாதாரணக் கவிதை என்று ஒதுக்கிவிட இயலாது. ஒவ்வொரு கவிதையை
வாசித்து முடிக்கையிலும் மனசுக்குள் தோன்றுகிறது ஓர் ஆச்சர்ய மின்னல், இப்படியெல்லாம்
ஒரு நிகழ்வைப் பார்க்க முடியுமா? இதையெல்லாம் கவிதையாக்க முடியுமா என. இந்த ஆச்சர்யங்கள்
முதல் கவிதை தொடங்கி கடைசிக் கவிதை வரை வந்துகொண்டேயிருந்தது. வாசித்து முடிக்கையில்
மனசு ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்த பெருந்திருப்தியோடு மறுபடி புத்தகத்தை
முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தது.
கவிதை நடையில் சூட்சுமங்களோ, ஒளிந்து கொண்டிருக்கும்
பொருளோ, புரியாமல் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய அவசியமோ இல்லை. மலையின்மேலோடும்
தெளிந்த ஓடை தனக்குள்ளிருக்கும் எல்லாவற்றையும் காட்டிக்கொண்டு கடப்பது போல அவ்வளவும்
தெளிவான கவிதைகள். தெளிந்த ஓடையைப் பார்க்கையில் மனசுக்குக் கிடைக்கும் ஆசுவாசமும்,
திருப்தியும், மகிழ்ச்சியும் ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடிக்கையில் கிடைத்துவிடுகிறது.
நாம் தேவையற்றவையென ஒதுக்கிவிடுபவற்றை எடுத்து
தனக்கொரு கூடு செய்யும் குருவிக்கூட்டைப் பார்த்துவிட்டுக் கவிஞர் கவலை கொள்கிறார்
நம்மைப் பார்த்து, அந்தக் கூடு நம் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமென்று. ஏனெனில் அக்கூட்டை,
நமக்குத் தேவையற்றதென நாம் கலைத்துவிடக்கூடுமென்று. இதுதான் கவிஞனின் மனம். இன்னொரு
கவிதையில் யாரோ ஒருவர் புகைத்து விடும் பீடிப்புகையில், இல்லாமல் போய்விட்ட அப்பாவின்
வாசனை உணரப்படுகிறது. இதுதான் கவிஞனின் வாசனை. வாழ்வைத் துரத்துதல் என்ற கவிதை எல்லோரும்
சந்திக்கின்ற நிகழ்வுகளை வெகு இலாவகமான கவிதை மொழியில் எடுத்துத் தந்து ஆச்சர்யப்படுத்துகிறது.
வண்ணங்கள் எல்லோரைப் பொருத்தவரையிலும் அழகு.
ஆனால் அந்த வண்ணங்களை அழுக்கென்று கழுவும் ஒரு வர்ணமடிப்பவனின்(பெயிண்டர்) வாழ்வைப்
பின்தொடர்கையில்தான் வண்ணங்கள் அழுக்கெனவும் புலனாகிறது. அந்த அழுக்கே கவிதையாகவுமாகிறது.
நாள்தோறும் நாம் தார்ச்சாலைகளில் பயணிக்கிறோம். அத்தார்ச்சாலைகளில் சில இடங்களில் ஒட்டியிருக்கும்
அதீதக் கருப்பையோ வெளுப்பையோ கவனிப்பதில்லை. அதீதக் கருப்பான இடங்கள் நம்மைப்போல கண்மூடித்தனமாக
விரைபவர்களின் சக்கரங்கள் நசுக்கிய காக்கை குருவிகள் என்கிறது ஒரு கவிதை. வாசித்ததும்
ஒரு குற்ற உணர்வு மனதெங்கும் வியாபிப்பதைத் தடுக்கமுடியவில்லை. இதுதான் கவிஞனின் கண்கள்.
இப்படி நிறையக் கவிதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒவ்வொரு கவிதையும் ஓர் ஆச்சர்யம். ஒவ்வொரு கவிதையும் ஒரு மின்னல். ஒவ்வொரு கவிதையும்
ஓர் அலாதி அனுபவம். பட்டாம்ப்பூச்சியோடு ஒரு கவிஞனால் மட்டுமே ஷெல்பி எடுக்கமுடியும்.
ஒரு கவிஞனுக்கு மட்டுமே பட்டாம்பூச்சி ஷெல்பி எடுக்க வாய்ப்பளிக்கும். எத்தனையோபேர்
பட்டாம்பூச்சியைப் பார்க்கிறார்கள். எத்தனையோபேர் பட்டாம்பூச்சியைப் பிடித்து மகிழ்கிறார்கள்.
எத்தனையோபேர் பட்டாம்பூச்சியின்மேல் காதல் கொள்கிறார்கள். ஆனால் பட்டாம்பூச்சி ஒரு
கவிஞனோடு மட்டுமே ஷெல்பி எடுத்துக்கொள்கிறது.
ஒரு உண்டியல் உடைப்பில் கவிஞன் கடவுளானது கண்டு
பிரம்மித்துப்போனேன். தன்மீது விழும் மழைத்துளிகளை, கொடும் வெயிலில் எங்கோ மரம் நடுபவனின்
வியர்வைத் துளிகளெனப் பார்க்கும் பார்வையெல்லாம் சாமான்யத்தில் யாருக்கும் அகப்படாத
பார்வை. உயரங்களைத் தீர்மானிக்கும் தேய்மானங்களைக் கடந்தபொழுதுதான் நான் திரும்பிப்
பார்த்தேன் என் உயரத்திற்காக நடந்த தேய்மானங்களை. இப்படி ஒவ்வொரு கவிதையுமே ஓர் ஆச்சர்ய
அனுபவம். தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே மிகச்சிறப்பு.
கவிமனம் வேண்டுமென நினைக்கும் ஒவ்வொருவரும் வாங்கி
வாசிக்க வேண்டிய தொகுப்பு பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள். இத்தொகுப்பின் ஆச்சர்யங்கள்
சாமிகிரிஷ்ஷை உயரமேற்றி உட்கார வைக்கும். இது சாமிகிரிஷ்ஷின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
ஆனால் இதுதான் நான் வாசித்த சாமிகிரிஷ்ஷின் முதல் தொகுப்பு. இப்போது நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
சாமிகிரிஷ்ஷின் முதல் கவிதைத் தொகுப்பை. வாழ்த்துகள் சாமிகிரிஷ். இத்தகு சிறந்த கவிதைகளை
வெகு அழகான புத்தகமாக்கி வாசிக்கக் கொடுத்த தேநீர் பதிப்பகத்திற்கும், தேநீர் பதிப்பகத்தின்
திரு.கோகிலன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
-சௌவி
05.04.2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








