செவ்வாய், 12 மே, 2020

தூக்கம்


தூக்கம்


நேற்று மதியம் நான்
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்கிக்கொண்டிருந்தேன்
இரண்டு நாட்களுக்குமுன் ஊருக்குப் போன நீ
திரும்பி வந்து
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதைப் பார்த்து
கோபித்துக்கொண்டாய்
யாருக்குத்தான் கோபம் வராது?
இதுபோன்ற சூழலில் கோபம் வரவேண்டும்
சின்ன வயதில் அம்மாவைக் கட்டிப்பிடித்தே
தூங்குவது வழக்கம்
அம்மாவைக் கட்டிப்பிடித்துப் படுத்தபின்தான்
தூக்கமே வரும்
எப்போது உறங்குகிறேனெனத் தெரியாமலே
தூங்கிவிடுவேன்
கொஞ்சம் வளர்ந்தபிறகு
அம்மாவிடமிருந்து தனியாகப் படுக்க ஆரம்பித்தபின்
கொஞ்சநாட்கள் கட்டிப்பிடித்தலின்றித்தான்
தூங்கிக்கொண்டிருந்தேன்
அது ஓர் அந்திப் பொழுதில்
மிகப் பெரியதாய் கிழக்கு வானில் பூத்துவந்த
பௌர்ணமி நிலவைப் பார்க்கும்வரைதான்
அன்றுதான் காதலின் மலரொன்று
என் மனக்காட்டில் அவ்வளவு வாசத்தோடு பூத்தது
அன்றிரவு நிலவைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்கினேன்
பிறகு
சில நாட்கள் மலையைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நட்சத்திரத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் மேகத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நதியைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் வானவில்லைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் கடலைக் கட்டிப்பிடித்தபடி
தூங்குவது வழக்கமாகிப்போனது
இவ்வெவற்றாலும் என்னை சமாதனப்படுத்தமுடியாத
சமயத்தில்
அம்மாவைக் கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்துக்கொள்வேன்
அம்மா தரும் ஆசுவாசத்தைப் போலவோ
ஆறுதலைப்போலவோ
யாராலும் தந்துவிட முடியாதுதான்
இப்படிக் கட்டிப்பிடித்துத் தூங்குவது
அடிக்கடி மாறிக்கொண்டிருந்தாலும்
உன்னைப் பார்த்த நாளிலிருந்து
உனக்குத் தெரியாமலே உன்னைக் கட்டிப்பிடித்து
தூங்க ஆரம்பித்துவிட்டேன்
இதை உன்னிடம் சொன்னபோது
அன்றும் இப்படித்தான் கோபித்துக்கொண்டாய்
உன்னைக் கட்டிப்பிடித்துத் தூங்க ஆரம்பித்ததிலிருந்து
எனக்கு நிலா நட்சத்திரம் வானவில் நதி அருவி
கடல் என எல்லாமே நீயாகிப்போனாய்
நீ ஊருக்குப் போய்விடும் நாட்களில்
உன்னை நிலவாக்கியோ நட்சத்திரமாக்கியோ
கடலாக்கியோ நதியாக்கியோ
கட்டிப்பிடித்துத் தூங்கப் பழகிவிட்டேன்
நேற்றும் அப்படித்தான்
உன்னை நிலவாக்கி கட்டிப்பிடித்துத்
தூங்கிக்கொண்டிருந்தேன்
ஊரிலிருந்து வந்த நீ
பார்த்தவுடன் கோபித்துக்கொண்டாய்
பிறகு அந்த நிலவை உன்னிடமே கொடுத்து
பார்க்கச்சொன்னேன்
வெகு நேர ஆராய்ச்சிக்குப்பிறகு
நிலா நீதானெனத் தெரிந்தபிறகு
அவ்வளவு சந்தோஷப்பட்டாய்
இப்போது உன்னை நட்சத்திரமாக்கிக் காட்டு
கடலாக்கிக் காட்டு
நதியாக்கிக் காட்டு
எனக்கேட்டு என்னைத் தொல்லைசெய்ய
ஆரம்பித்துவிட்டாய்
உன்னை நீயாகவே கட்டிப்பிடிப்பதுதான்
எனக்கு மிகப்பிடிக்குமடி

-சௌவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக