செவ்வாய், 12 மே, 2020

பொறுமை




பொறுமை


இந்த மலைகளைப் போல
உங்களாலும் என்னாலும்
அவ்வளவு
பொறுமையாக இருக்கமுடியாது

என்ன நடந்தபோதும்
எங்கேயும் எழுந்துபோகாமல்
இருந்த இடத்திலேயே
உட்கார்ந்துகொண்டிருக்கும்
மலைகளைப்போல
பொறுமையுடையவர்கள் யாரும் இல்லைதான்

மலைகள் எழுந்து நடந்துபோக ஆரம்பித்தால்
பூமியில் அதிகாரம் மிகுந்தவைகளாக
மலைகள்தான் இருக்கக்கூடும்
மலைகளை எதிர்த்து நிற்கும் பலம்
யாருக்குமில்லை

மலையின் மீது வெயிலடிக்கிறது
மலையின் மீது மழை பொழிகிறது
மலையினை வெட்டி வெட்டி
பாதை அமைக்கிறார்கள்
மலையை உடைத்து உடைத்துக்
கற்களாக்கி விற்கிறார்கள்
மலைக்குள் குழி தோண்டி
வெடி வைத்துப் பிளக்கிறார்கள்

என்ன செய்தபோதும்
திருப்பி எதிர்க்காமல்
எப்படி
இப்படிப் பொறுமையாக இருக்கமுடிகிறது இந்த மலைகளால்?

நினைக்க நினைக்க
விரியும் ஆச்சர்யத்தைக் கடந்து
அதற்கப்பால் போக முடியவில்லை

நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்
மலைகளெல்லாம்
நடந்துபோவதாகவும்
மலைகள் மாநாடு கூட்டுவதாகவும்
ஒரு நாட்டின் மலைகளுக்கும்
இன்னொரு நாட்டின் மலைகளுக்குமிடையே
சண்டை ஏற்பட்டுத் 
தாக்கிக்கொண்டதாகவும்

அப்பப்பா..
பயங்கரமாக இருந்தது கனவு

காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று
சன்னலைத் திறந்துபார்த்தேன்
தூரத்திலிருந்த மலை
எங்கேயும் போகாமல்
அங்கேயே நின்றுகொண்டு
எனைப் பார்த்துப் புன்னகைத்தது

-சௌவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக