புதன், 8 ஏப்ரல், 2020

வாழ்க்கை


***வாழ்க்கை*****

வதவதவென ஆறேழு குட்டிகள்
பாலூட்டிக்கொண்டிருக்கிறது தாய் நாய்
இரு சக்கர வாகனத்தில் கடக்குமென்னை
முறைத்துப்பார்க்கிறது
பயத்தோடே மெதுவாய்க் கடக்கிறேன்
நேற்று வேகமாகச் சென்றபொழுது
வீதிமுனை வரை விடாது துரத்தி வந்தது
என் வீட்டுக்குச் செல்ல
இருக்கும் ஒரே வீதி இதுதான்
யாராவது நகராட்சி ஆட்கள் வந்து
பிடித்துச்செல்வார்களா எனப்பார்க்கிறேன்
நடக்கவில்லை
குட்டிகள் துரத்திக்கொண்டு விளையாடுகின்றன
ஒன்றையொன்று கடித்துக்கொண்டு விளையாடுகின்றன
போக்குவரத்து அதிகமற்ற இந்த வீதி
குட்டிகளை ஈனி வளர்க்க
நல்ல சௌகரியமாகப் போய்விட்டது நாய்க்கு
நானும் மெதுவாய்க் கடந்து பழகிக்கொண்டேன்
வேகமாக ஓட்டினால்தானே துரத்திக்கொண்டு
கடிக்க வரும்
அத்தனை குட்டிகளும் அம்மா நாயும்
அத்தனை பாசத்தோடு விளையாண்டுகொண்டிருக்கின்றன
நாளை தாயும் குட்டியுமோ அல்லது
ஒரு குட்டி மற்றொரு சகோதரக்குட்டியையோ
இதே நகரத்தின் ஏதேனுமொரு வீதியில்
எதிரியாகச் சந்திக்கலாம்

-சௌவி

கோடை மழை


****கோடை மழை*****

கோடையில் பெய்யுமொரு
மழையின் வாசம்
மனசுக்குள் கிளர்த்திவிடுகிறது
மேகங்களின் ஊர்வலத்தை
கான்கிரீட் சமாதிகளாகிப்போன
கிராமத்துப் பழைய வீதிகளின்
மண் வாசத்தை
ஆரம்பப்பள்ளியின் சந்திரா டீச்சர்
வைத்துக்கொள்ளச்சொல்லிக் கொடுத்த
ஆரஞ்சு நிறக்குடையை
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைக்கு
பாத்திரங்கள் பரிசளித்ததை
காரை வாசலின் ஈரத்தில்
வழுக்கி விழுந்து தாடையுடைந்த வலியை
சாக்கு முக்காடிட்டுக்கொண்டு
தட்டக்காட்டில் அம்மாவோடு
காய் பறித்த நாட்களை
வாங்கி வைத்திருந்த பட்டாசுகளெல்லாம்
வாய்திறக்காது மௌனித்த தீபாவளியொன்றை
நனைந்துகொண்டே அப்பாவின் சைக்கிளில்
ஆஸ்பத்திரி சென்ற அவசரத்தை
பள்ளம் நிரம்பியோடிய வெள்ளம்பார்த்தெழும்பிய அச்சத்தை
கடக்கமுடியாத வெள்ளமென
பொய்யுரைத்த விடுமுறைகளை
ஈசல் பொறுக்கிய வீதி விளக்குகளின்
வெள்ளை வெளிச்சத்தை
புத்தகப்பை நனைந்து
அப்பாவிடம் வாங்கிய அடிகளை
ரயில் பயணம் துவங்காத
மெட்ரோ பாதைக்கடியில்
அச்சுவோடு நடந்துபோனதை
புதிதாய் அணிந்த வெள்ளைச்சட்டையில்
பேருந்தின் சக்கரங்கள் வரைந்த
சேற்றோவியங்களை
மழை எப்போதும்
மழையை மட்டுமே பொழிவதில்லை

-சௌவி


ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

என்மேல் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி



என்மேல் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி 
                                           -சௌவி    
       
        அன்றாடம் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள். என்ன நிகழ்ந்தாலும் உலகம் அதுபாட்டுக்குச் சுழன்றுகொண்டேயிருக்கிறது இரவையும் பகலையும் சீரான இடைவெளியில் மாறி மாறிக் காட்டியபடி. ஒரு தொழிற்சாலை செல்பவனுக்கு காலை எழுதல், கடன்கள் முடித்தல், காலை உணவு, அலுவலகத்துக்கான பயணம், அலுவலகத்து வேலை, ஒரு தேநீர், மறுபடி வேலை, மதிய உணவு, மறுபடி வேலை, மறுபடி ஒரு தேநீர், மறுபடி வேலை, வேலை முடிந்தவுடன் வீட்டை நோக்கிய பயணம், குடும்பத்துடன் சிறிது நேரம், இரவுச் சாப்பாடு, தொலைக்காட்சி, உறக்கம் என்றாகிப்போன இயந்திர வாழ்வு. இதுபோலத்தான் ஒரு ஆசிரியனுக்கும், ஒரு விவசாயிக்கும் சற்றே மாற்றி எழுதப்பட்ட ஆனால் தொடர் நிகழ்வுகளாலான இயந்திர வாழ்வு. வாழ்வை இயந்திர வாழ்வெனக் கடந்து செல்பவர்கள் அப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறார்கள் எப்போதும். இந்த வாழ்வின் பெருஞ்சலிப்புகளுக்கிடையே, தன் மனத்தை சற்றே விலக்கி மலைகளை, அவ்வப்போது பெய்யும் மழையை, வண்ணத்துப்பூச்சியை, குழந்தையின் சிரிப்பை, பாதையோரத்து மரத்தின் புன்னகையை, அம்மரத்தில் பூத்திருக்கும் ஈரமான பூக்களை, சாலையில் குறுக்கிடும் நதியை ரசிப்பவனே ரசிகனாகிறான். ரசித்துவிட்டு மறக்காமல் தன்னோடு எடுத்துச்சென்று மறுபடி மறுபடி மனசுக்குள் பார்த்து ரசிப்பவனே கவிஞனாகிறான். அத்தகு ஒரு கவிஞன் சாமி கிரிஷ்.
       சாமி கிரிஷ்ஷின் பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள் கவிதைத் தொகுப்பை கடந்த ஐந்து நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்து முடித்தேன். நாம் சாதாரணமாய்க் கடந்துபோகும் எல்லா நிகழ்வுகளிலுமே கவிதையைக் கண்டெடுக்கும் சாமிகிரிஷ்ஷின் கவிதை மனதை என்னவென்று சொல்ல..! இந்தப் புத்தகத்திலுள்ள எல்லாக் கவிதைகளுமே நாம் அன்றாடம் கடந்து போகின்ற நிகழ்வுகளில் நமக்குப் பார்க்கத் தெரியாத கவிதை நிமிடங்கள். எந்த நிகழ்வென்றாலும் அதற்குள் ஒரு கவிதை ஒளிந்திருப்பதைக் கண்டெடுக்கும் கவிதைக் கண்கள் சாமிகிரிஷ்ஷுக்கு.

     இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே மிகச் சிறப்பு. எந்த ஒரு கவிதையையும் இது சாதாரணக் கவிதை என்று ஒதுக்கிவிட இயலாது. ஒவ்வொரு கவிதையை வாசித்து முடிக்கையிலும் மனசுக்குள் தோன்றுகிறது ஓர் ஆச்சர்ய மின்னல், இப்படியெல்லாம் ஒரு நிகழ்வைப் பார்க்க முடியுமா? இதையெல்லாம் கவிதையாக்க முடியுமா என. இந்த ஆச்சர்யங்கள் முதல் கவிதை தொடங்கி கடைசிக் கவிதை வரை வந்துகொண்டேயிருந்தது. வாசித்து முடிக்கையில் மனசு ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்த பெருந்திருப்தியோடு மறுபடி புத்தகத்தை முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தது.
     கவிதை நடையில் சூட்சுமங்களோ, ஒளிந்து கொண்டிருக்கும் பொருளோ, புரியாமல் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய அவசியமோ இல்லை. மலையின்மேலோடும் தெளிந்த ஓடை தனக்குள்ளிருக்கும் எல்லாவற்றையும் காட்டிக்கொண்டு கடப்பது போல அவ்வளவும் தெளிவான கவிதைகள். தெளிந்த ஓடையைப் பார்க்கையில் மனசுக்குக் கிடைக்கும் ஆசுவாசமும், திருப்தியும், மகிழ்ச்சியும் ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடிக்கையில் கிடைத்துவிடுகிறது.
     நாம் தேவையற்றவையென ஒதுக்கிவிடுபவற்றை எடுத்து தனக்கொரு கூடு செய்யும் குருவிக்கூட்டைப் பார்த்துவிட்டுக் கவிஞர் கவலை கொள்கிறார் நம்மைப் பார்த்து, அந்தக் கூடு நம் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமென்று. ஏனெனில் அக்கூட்டை, நமக்குத் தேவையற்றதென நாம் கலைத்துவிடக்கூடுமென்று. இதுதான் கவிஞனின் மனம். இன்னொரு கவிதையில் யாரோ ஒருவர் புகைத்து விடும் பீடிப்புகையில், இல்லாமல் போய்விட்ட அப்பாவின் வாசனை உணரப்படுகிறது. இதுதான் கவிஞனின் வாசனை. வாழ்வைத் துரத்துதல் என்ற கவிதை எல்லோரும் சந்திக்கின்ற நிகழ்வுகளை வெகு இலாவகமான கவிதை மொழியில் எடுத்துத் தந்து ஆச்சர்யப்படுத்துகிறது.
     வண்ணங்கள் எல்லோரைப் பொருத்தவரையிலும் அழகு. ஆனால் அந்த வண்ணங்களை அழுக்கென்று கழுவும் ஒரு வர்ணமடிப்பவனின்(பெயிண்டர்) வாழ்வைப் பின்தொடர்கையில்தான் வண்ணங்கள் அழுக்கெனவும் புலனாகிறது. அந்த அழுக்கே கவிதையாகவுமாகிறது. நாள்தோறும் நாம் தார்ச்சாலைகளில் பயணிக்கிறோம். அத்தார்ச்சாலைகளில் சில இடங்களில் ஒட்டியிருக்கும் அதீதக் கருப்பையோ வெளுப்பையோ கவனிப்பதில்லை. அதீதக் கருப்பான இடங்கள் நம்மைப்போல கண்மூடித்தனமாக விரைபவர்களின் சக்கரங்கள் நசுக்கிய காக்கை குருவிகள் என்கிறது ஒரு கவிதை. வாசித்ததும் ஒரு குற்ற உணர்வு மனதெங்கும் வியாபிப்பதைத் தடுக்கமுடியவில்லை. இதுதான் கவிஞனின் கண்கள்.
     இப்படி நிறையக் கவிதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு கவிதையும் ஓர் ஆச்சர்யம். ஒவ்வொரு கவிதையும் ஒரு மின்னல். ஒவ்வொரு கவிதையும் ஓர் அலாதி அனுபவம். பட்டாம்ப்பூச்சியோடு ஒரு கவிஞனால் மட்டுமே ஷெல்பி எடுக்கமுடியும். ஒரு கவிஞனுக்கு மட்டுமே பட்டாம்பூச்சி ஷெல்பி எடுக்க வாய்ப்பளிக்கும். எத்தனையோபேர் பட்டாம்பூச்சியைப் பார்க்கிறார்கள். எத்தனையோபேர் பட்டாம்பூச்சியைப் பிடித்து மகிழ்கிறார்கள். எத்தனையோபேர் பட்டாம்பூச்சியின்மேல் காதல் கொள்கிறார்கள். ஆனால் பட்டாம்பூச்சி ஒரு கவிஞனோடு மட்டுமே ஷெல்பி எடுத்துக்கொள்கிறது.
    ஒரு உண்டியல் உடைப்பில் கவிஞன் கடவுளானது கண்டு பிரம்மித்துப்போனேன். தன்மீது விழும் மழைத்துளிகளை, கொடும் வெயிலில் எங்கோ மரம் நடுபவனின் வியர்வைத் துளிகளெனப் பார்க்கும் பார்வையெல்லாம் சாமான்யத்தில் யாருக்கும் அகப்படாத பார்வை. உயரங்களைத் தீர்மானிக்கும் தேய்மானங்களைக் கடந்தபொழுதுதான் நான் திரும்பிப் பார்த்தேன் என் உயரத்திற்காக நடந்த தேய்மானங்களை. இப்படி ஒவ்வொரு கவிதையுமே ஓர் ஆச்சர்ய அனுபவம். தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே மிகச்சிறப்பு.
     கவிமனம் வேண்டுமென நினைக்கும் ஒவ்வொருவரும் வாங்கி வாசிக்க வேண்டிய தொகுப்பு பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள். இத்தொகுப்பின் ஆச்சர்யங்கள் சாமிகிரிஷ்ஷை உயரமேற்றி உட்கார வைக்கும். இது சாமிகிரிஷ்ஷின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஆனால் இதுதான் நான் வாசித்த சாமிகிரிஷ்ஷின் முதல் தொகுப்பு. இப்போது நான் தேடிக்கொண்டிருக்கிறேன் சாமிகிரிஷ்ஷின் முதல் கவிதைத் தொகுப்பை. வாழ்த்துகள் சாமிகிரிஷ். இத்தகு சிறந்த கவிதைகளை வெகு அழகான புத்தகமாக்கி வாசிக்கக் கொடுத்த தேநீர் பதிப்பகத்திற்கும், தேநீர் பதிப்பகத்தின் திரு.கோகிலன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

-சௌவி
 05.04.2020