நீர்ச்சொட்டுஇலையின் முனையில் குவிந்திருக்கும் நீர்த்துளி இன்னும் சற்றுநேரத்தில் சிதறப்போகிறது பொடிப்பொடித்துளியாய்..அதற்குள் அது ஞாபகப்படுத்துகிறதுஒரு தலைகீழான ஆச்சர்யத்தை..காதலியின் கடைசிக் கண்ணீர்த்துளியை..பால் சுரந்துநிற்கும் மாட்டின் காம்பை.என்றோ அவளிட்டு வந்த நெற்றிப்பொட்டை..அடிக்காமல் பாடம் சொல்லிக்கொடுத்த உமா டீச்சரின் காதணியை.ஆழமான ஒரு கடலை..அழகான ஒரு மழையை..குதித்து உயிர்விடுமொரு தற்கொலையை..துரோகத்தைக் குத்திக் கொன்ற கத்தியிலிருந்து வழிந்த கடைசி இரத்தத் துளியை..-சௌவி
திங்கள், 28 டிசம்பர், 2015
நீர்ச்சொட்டு
திங்கள், 27 ஏப்ரல், 2015
வெளிச்சம் 24.04.2015
இன்று
என் கவிதைகளைப்பற்றிப் பேசலாமென கவிஞர்.அம்சப்ரியா அழைத்திருந்தார் ஒரு
வாரத்திற்கு முன்பே. என்னுடைய கவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை அவரிடம்
கொடுத்திருந்தேன் சீர்படுத்தவும் செம்மைப்படுத்தவும். இன்று காலையில் அழைத்து
நினைவூட்டினார் சந்திப்பைப்பற்றி. இன்றைய சந்திப்புக்காக நான் அலுவலகத்திற்கு இரு
சக்கர வாகனத்திலேயே வந்துவிட்டேன் வழக்கமான பேருந்துப் பயணத்தைத் தவிர்த்துவிட்டு.
கவிஞர்.அம்சப்ரியா
காலையிலேயே அழைத்து மறுபடியும் நினைவூட்டினார். பில்சின்னாம்பாளையம் கிராமத்தில்
அம்சப்ரியாவின் வீட்டிலேயே சந்திக்கலாமென்றார். பின் அவருடைய இல்லத்தில்
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டம் இன்று என்றும், அந்தக் கூட்டத்தில்
புத்தக வாசிப்பும் கல்வியும் என்ற தலைப்பில் என்னைப் பேசவேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டார்.
நான்
இன்னும் அந்த அளவிற்குப் பேசவராத, தடுமாறுகின்ற மேடைப் பேச்சைக் கொண்டவனாகத்தான்
இருக்கின்றேன். ஆனாலும் எனக்கான பயிற்சிக்களமாக, என்னை நன்றாகப் பேசுபவனாக மாற்ற
கவிஞர்.அம்சப்ரியா ஏற்படுத்தியிருக்கிற பயிற்சிக்களம் என்பதால், மகிழ்வுடன்
சாயங்காலப்பொழுதை எதிர்பார்த்திருந்தேன்.
ஐந்து
மணிக்கு பில்சின்னாம்பாளையம் கிராமத்தை அடைந்துவிடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் அலுவலகத்தில் வந்த அவசரவேலை காரணமாக தாமதமாகிப்போனது. பொள்ளாச்சியை
அடைவதற்கே மாலை 6:30 ஆகிவிட்டது.
பொள்ளாச்சியிலிருந்து பில்சின்னாம்பாளையம் நோக்கி வாகனத்தை விரட்டத்துவங்கினேன்.
மெல்ல மெல்ல மங்கிக்கொண்டிருந்த பகலும், தன்னை எழுத ஆரம்பித்திருந்த இரவும்
சந்தித்துப்பேசிக்கொண்டிருந்த மாலை இதமாக இருந்தது. அதுவும் அந்தத் தென்னை
மரங்களடர்ந்த பாதைக்கு ஒரு பேரழகைக் கொடுத்திருந்தது. அந்திமாலை தனக்கேயுரிய
தென்றலின் இசையை தேகத்தின் எல்லாச் செவிகளுக்குமாய் இசைத்துக்கொண்டிருந்தது.
ஆனந்தமாயிருந்தது இருசக்கர வாகனப்பயணம்.
பில்சின்னாம்பாளையம்
கவிஞர்.அம்சப்ரியாவைப் போலவே கனிவும் பொலிவும் கொண்டிருந்தது.
கவிஞர்.அம்சப்ரியாவின் இல்லத்தை அடைந்தேன். அத்தனை முகமகிழ்வோடு வரவேற்ற அம்சப்ரியாவின்
முகம் பார்த்ததும் என் மனசுக்குள் சந்தோஷத்தில், உற்சாகத்தில் முளைத்தன பல்லாயிரம்
மலர்கள். பின் கவிஞர்.அம்சப்ரியாவின் இல்லத்தில் அவர் உள்ளத்தைப்போலவே
கவிதைப்புத்தகங்கள் நிறைந்திருந்த அறையில் அமர்ந்து அவரோடு பேசிய நிமிடங்கள்
மறக்கமுடியாதவை. தன்னலமில்லா ஒரு கவிஞனாக, நிறைய படைப்பாளர்களை
உருவாக்கிக்கொண்டிருக்கும் களமாக, தன்னை மாற்றிக்கொண்டு இந்தச் சமுதாயத்தை
இலக்கியத்தின் மூலமாக உய்யச்செய்யவேண்டுமென தன் நெய்தலை இடைவிடாது
செய்துகொண்டிருக்கும் ஒரு போராளியின் அருகில் அமர்ந்திருந்த நிமிடங்களை என்
வாழ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் என்பேன்.
என்
கவிதைகள் பற்றியும், தற்காலக் கவிதைகளின் போக்கு பற்றியும், கவிதைக்கான தளங்கள்
பற்றியும் வெகு சிறப்பாக , எப்படியான கவிதைகள் எழுதப்படவேண்டுமென்று என்னை
ஆற்றுப்படுத்தினார் கவிஞர்.அம்சப்ரியா. அவருடைய அந்த அறை புத்தகங்களால்
நிரம்பியிருந்தது. புத்தகங்களெல்லாம் வெகு நேர்த்தியாக அவ்வறையை
அழகூட்டிக்கொண்டிருந்தன. வீட்டை அலங்கரிப்பதற்கு புத்தகங்களைவிட சிறந்த பொருட்கள்
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற எப்போதோ படித்த வாசகத்திற்குப் பொருள்
சொன்னது கவிஞர்.அம்சப்ரியாவின் இல்லம்.
என்னிடம்
இரண்டு சிறந்த கவிதைத்தொகுப்புக்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
எப்போதுவேண்டுமானாலும் வந்து புத்தகங்களைப் படிக்கலாமென்றும் சொன்னார்.
எழுதத்துவங்குவோர் எல்லோரையும் ஊக்கப்படுத்தும் இப்படியொரு மனிதரை, கவிஞரை நான்
சந்தித்ததில்லை. அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும் என்பார்கள். அதை
இப்போதுணர்ந்தேன் நான். தன்னுடைய வீட்டை எல்லோரும் படிக்கும் நூலகமாக
ஆக்கியிருக்கும் கவிஞர்.அம்சப்ரியாவின் செயலை, எண்ணத்தை எப்படிப் பாராட்ட...?
வார்த்தைகளில்லை.
புன்னகை
பூ ஜெயக்குமார் புன்னகைகளோடு வந்தார். உண்மையான புன்னகைகள்தான் எவ்வளவு
வெளிச்சத்தை மனசுக்குள் ஏற்படுத்துகின்றன? விவேகானந்தர் கனவு கண்ட இளைஞராக
சமுதாயப் பணியாற்றும் புன்னகை பூ ஜெயக்குமார், தான் கற்ற கல்வியை மலரத் துடிக்கும்
செடிகளின் மீது ஒரு பரிதியின் கதிரென ஊற்றிக்கொண்டிருப்பவர். ஒரு தேநீருக்குப்
பிறகு இலக்கியக் கூட்டம் துவங்கியது கவிஞர்.அம்சப்ரியா அவர்களின் வீட்டு மொட்டை
மாடியில். பில்சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வந்திருந்தார்கள்.
நானும் புன்னகை பூ ஜெயக்குமாரும் சிறப்பு விருந்தினர்கள் என
அறிமுகப்படுத்தப்பட்டோம். ஒரு கூட்டம் எப்படி நடத்திமுடிக்கப்படவேண்டும் என்ற
வரையறையோடு, இலக்கணத்தோடு நடந்தது கூட்டம்.
முதலில்
சிறு விளையாட்டு. அவ்விளையாட்டில் எல்லோருடைய மனசும் மகிழ்ச்சிக்கு மாறியது.
எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் ஆரம்பமாகவும் அவ்விளையாட்டு அமைந்தது. பின்
வரவேற்புரை, சிறப்புத் தலைப்புக்களில் பேச்சு எனக் களைகட்டியது கூட்டம். புன்னகை
பூ ஜெயக்குமார் ‘கற்க கசடற’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக , எல்லோருக்கும்
எளிதாகப் புரியும் வகையில் ஒரு கதையுடன் தன் உரையைச் சிறப்பாக முன்வைத்தார்.
அதற்குப் பிறகு நான் நடமாடும் நூலகத்தை திறந்து வைத்து புத்தக வாசிப்பும்
கல்வியும் என்ற தலைப்பில் (வழக்கமான தடுமாற்றங்களோடு) பேசினேன். பின்னர் வினாடி
வினா நிகழ்ச்சி. பின்னர் புகை பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என்ற உறுதி
மொழியை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விழா இனிதே நிறைவுபெற்றது.
நடமாடும்
நூலகத்தின் மூலம் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு புத்தகம்
வழங்கப்பட்டது. ஒரு வாரம் முழுக்க அப்புத்தகத்தைப் படித்துவிட்டு அடுத்த
கூட்டத்திற்கு வரும்போது அப்புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு ஒரு
புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் புத்தகம் வாங்க வழியில்லாதோரும் ,
எந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பது எனத் தெரியாதோரும் தங்களுடைய அறிவை
விசாலமாக்கிக்கொள்ளலாம். ஒரு புத்தகத்தை திறக்கும்போது நிறைய கெட்ட வாசல்கள்
மூடப்படுகின்றன. நல்ல பாதையில் நடப்பதற்கான முதலடி எடுத்து வைக்கப்படுகிறது.
அப்படியானதொரு நல்ல பாதையை எல்லோருக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்
கவிஞர்.அம்சப்ரியா நடமாடும் நூலகத்தின் வாயிலாக.
இக்கூட்டத்திற்கு
வந்திருந்த இளைஞர்களின், சிறுவர்களின் கண்களில் அவ்வளவு ஆர்வம். கற்க
வாய்ப்பில்லாமலும், வசதியில்லாமலும் , வேறு வழிகளில் அடித்துச் செல்லப்பட்ட
இளைஞர்களையும் தேடிப்பிடித்து, அவர்களுக்கு போதித்து, அவர்களை நல்வழிப்படுத்தி,
அவர்களின் மூலமாக நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
கவிஞர்.அம்சப்ரியாவின் செயல் மகத்தானது. இதுபோன்ற முயற்சிகளைப் பேசிவிட்டுப்
போய்விடுபவர்களே அதிகம். அதைச் செயலாக்கிக்கொண்டிருக்கும் கவிஞர்.அம்சப்ரியா
நமக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு சிறந்த சமுதாயச் சிற்பி. பில்சின்னாம்பாளையம்
கிராமத்தை மதுவற்ற முன்னோடி கிராமமாக மாற்ற,
விடாது களப்பணியாற்றும் முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்.
தற்போதைய காலகட்டத்தில் கெட்டுப்போவதற்கு ஆயிரம் வழிகள். கெட்டதைச்
சொல்லித்தர ஆயிரம் கைகள். இவற்றினூடே நல்வழிப்படுத்தும் கரங்களைக் காண்பதரிது.
வாய்ப்பற்றோரை வாய்ப்புள்ளவனாக்க, கெட்ட வழியில் வீழ்ந்துவிட்டோரை நல்வழிப்படுத்த,
இப்படியொரு கூட்டத்தைக் கட்டமைக்க, எத்தனை பெரிய உழைப்பைச் சிந்தியிருக்க வேண்டும்
கவிஞர்.அம்சப்ரியா..! வெகு ஆச்சர்யமாகவும்
, மலைப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.
சிறு உதவிகளுக்கோ, அரசாங்கத்தின் உதவிகளுக்கோ தன்னுடைய பெயரை பெரிய
அளவில் விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களாலான உலகம் இது. விளம்பரத்திற்காகவே
உதவிகள் செய்யும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. இப்படிப்பட்ட உலகில் எவ்வித
விளம்பரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி இச்சமுதாயத்தை நல்வழிக்கு ஆற்றுப்படுத்திக்
கொண்டிருக்கும் கவிஞர்.அம்சப்ரியா இச்சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் ஒரு
மாமனிதர். அவருடைய கவிதைகளைப் போலவே அவருடைய செயல்களும் வெகு சிறப்பு.
கூட்டம் முடிந்து எல்லோரிடமும் விடைபெற்று இல்லம் நோக்கிப்
புறப்பட்டேன். செம்பூக்களை நீட்டி வரவேற்ற , கூட்டம் முழுவதையும் அமைதியாக கிளைகளை
அசைத்து அசைத்து ரசித்த, அவ்விரு
குல்மொஹர் மரங்களிடமும் சொல்லிவிட்டு, கவிஞர்.அம்சப்ரியா படிக்கக் கொடுத்த கவிதைத்
தொகுப்புகளையும், அந்த குல்மொஹர் மரங்கள் கொடுத்த கவிதைகளையும் எடுத்துக்கொண்டு
புறப்பட்டேன். மணி இரவு 9 ஐத் தாண்டியிருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன்.
நட்சத்திரங்களற்ற வானமாயிருந்தது. வெளிச்சம் மிகு நட்சத்திரங்களை
கவிஞர்.அம்சப்ரியா உருவாக்கிக்கொண்டிருப்பதால் இனி நம் வெளிச்சம்
தோற்றுப்போகுமென்று வான் நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டன போலும். வாகனத்தை
விரட்டினேன். மனதின் புதிய வெளிச்சத்தால் பாதையின் இருள் காணாமல் போயிருந்தது.
-சௌவி
நன்றி
கவிஞர்.அம்சப்ரியா
புன்னகை பூ ஜெயக்குமார்
பில்சின்னாம்பாளையம் நண்பர்கள்
குல்மொஹர் மரங்கள்
பொள்ளாச்சி to ஆழியார் சாலை
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
பாதை 10.04.2015
நேற்றுப்
பெய்த மழையின் ஈரம் இன்னும் காற்றோடும் நிலத்தோடும் கலவிக்கொண்டிருந்தது. கதிரவன்
வானேற ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுதில் பேருந்தில் பயணிப்பதென்பது
எப்போதுமே சுகமானது. சன்னல் வழியாக விரியும் காட்சிகளில் எல்லாமே காலையின்
உற்சாகங்கள். எப்படிப்பட்ட மனநிலையையும் உற்சாகத்திற்கு கொண்டுவந்திட குளிர்தடவிய
இந்தக் கோடைகாலக் காலைப்பயணங்களால் முடியும். கிராமத்திலிருந்து பொள்ளாச்சி
வரையிலான இன்றைய பேருந்துப் பயணத்தில் அப்படியொரு உற்சாகத்தை அனுபவிக்க முடிந்தது.
பொள்ளாச்சி பேருந்து
நிலையத்தில் பாலக்காடு பேருந்திலேறி இடது வரிசையிலிருக்கும் இருக்கையில்
அமரப்போனேன். நான் நோக்கிச்சென்ற இருக்கையில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார்.
லுங்கி வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தார். அவரருகில் சென்று “யாராவது
வர்ராங்களா?” எனக் கேட்டதும் இன்முகத்தோடு “இல்லை உட்காருங்க” என சன்னலோரம்
நகர்ந்துகொண்டார். அது பேருந்தின் முதல் வாயிலை ஒட்டிய இருக்கை.
அவரை நல்ல மனிதர் என மனசு
உடனே முடிவு செய்தது. தொடர்ச்சியான பேருந்துப் பயணங்கள் மனித மனங்களைப் படிக்கும்
கலையைச் சற்று கற்றுக்கொடுத்திருந்தது. சிலர் இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில்
ஒற்றை ஆளாய் அமர்ந்துகொண்டு, யாரேனும்
உட்கார வந்தால் வேண்டா வெறுப்பாகத் தள்ளி உட்கார்வர். அப்படியே உட்கார்ந்தாலும்,
ஏதோ ஒரு பாகப்பிரிவினை மாதிரி, உடற்கட்டு ஒல்லியாக இருந்தாலும், பாதி இருக்கையை
ஆக்கிரமித்தபடி, கால்களை விரித்து அமர்ந்து கொள்வர். சிலரோ “பின்னுக்கு சீட்டிருக்கு
பாருங்க. சௌரீமா உக்காருங்க” எனத் தன் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை
வெளிப்படுத்துவர். அப்ப்டி எந்த மாதிரியான குரூர எண்ணங்களுமற்ற ஒரு மனிதராகவே
இன்று என்னருகில் அமர்ந்திருந்த அம்மனிதரைக் கண்ணுற்றேன். பக்கத்தில்
அமர்ந்துவரும் மனிதர்களைப் பொருத்தும் நம் காலைப்பயணத்தின் மனநிலை
மாறிவிடுகின்றது. இனிமையான முகத்தோடு நகர்ந்து அமர்பவர்கள் நம் பயணத்தையும்
இனிமையாக்கிவிடுகிறார்கள். வெறுப்பு சூழ்ந்த மனநிலை மனிதர்களின் அருகாமை நம்
பயணத்தையும் ஒருவிதமான இடறுதலுக்குள்ளாக்குகிறது. அப்படி இடறுதலேதுமற்றதாய் அமைந்தது
இப்பயணம். கொழிஞ்சாம்பாறைக்கு நான் பயணச்சீட்டு வாங்கினேன்.
தென்னை
மரங்களூடான கருப்புப் பாதையில் கோடைகாலத்தின் குளுமை தடவிய காற்று தழுவப்
பயணிப்பது மிகவும் சுகமானது. நான் வெளியே வேடிக்கை பார்ப்பதும், கையிலிருந்த
கைப்பேசியில் fb , whatsapp பார்ப்பதுமாக அமர்ந்திருந்தேன்.
அருகில் அமர்ந்திருந்தவர் யாருடனோ பேசுவது போலிருக்க, அவர் என்னிடம்தான் ஏதோ
பேசுகிறாரென அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்காமல் சன்னலுக்கு வெளியே
பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தார். காதில் ஏதும் கைப்பேசி வைத்து
பேசிக்கொண்டிருக்கிறாரா எனப் பார்த்தேன், அதுவுமில்லை. காது கொடுத்து உன்னிப்பாக
அவர் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
“எங்காவது
சுத்தறதுக்குப் போறது.. எப்ப வர்ரன், எங்க
போறேன் ஒரு எழவுஞ் சொல்றதில்ல. எப்பப்பாரு செல்போன்ல நோண்டிட்டே இருக்கறது”
என்றார். ஏதோ ஒன்று என்னைத் தாக்க நான் கைப்பேசித்திரையை மூடி சட்டைப்பையில்
போட்டுக்கொண்டேன்.
அந்த மனிதர் தொடர்ச்சியாகப் பேசியபடியேயிருந்தார்.
“வீட்டுக்கு
எதுவுங்குடுக்கறதில்ல. லீவானா பந்தாடப் போகவேண்டியது. அப்பனெவ்ளோ கஷ்டப்படறான்,
எங்க வேலைக்குப் போறான், என்னத்தயுங் கேக்கறதில்ல. நல்லாத் திங்கவேண்டியது, பந்தாட
வேண்டியது.. இப்பிடியிருந்தா எப்பிடி
சாப்பாடு கெடைக்கும்?”
புரிந்துகொண்டேன்
தன்னுடைய மகனைப்பற்றி திட்டிக்கொண்டே வருகிறார் என. அது ஏன் மகனை நேராய்
நிற்கவைத்துக் கேட்பது போன்றோ அல்லது வேறு யாருடனோ தன் மனதைச்
சொல்லிக்கொண்டிருப்பது போலவோ பேசியபடியிருந்ததுதான் ஏனென்று தெரியவில்லை.
“கொஞ்சங்கோட
பொறுப்பே கெடயாது, தெல்லவாரித்தனமா திரிய வேண்டியது. வீட்ல என்ன கஷ்டம்.. எப்பிடி
சாப்பாட்டுக்கு ஜாமானமெல்லாம் வாங்கறாங்க? ஒன்னுமே பாக்கறதில்லே. வரவேண்டியது,
திங்கவேண்டியது, கழுதையாட்டம் சுத்த வேண்டியது. அப்பனுக்கு எந்த ஒத்தாசையுஞ்
செய்யறதில்லை. இப்பிடியிருந்தா எப்பிடி வெளங்கறது? ஒன்னுந்தெரீல.” மகனின்
பொறுப்பற்றதனத்தை எண்ணி, குமுறிய அவரின் வார்த்தைகள் வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தன.
இடையிடையே சாலையில் எதிர்ப்படும் கோவில்களையெல்லாம் நோக்கி இரு கைகளையும் கூப்பி “ஆண்டவா.. நல்லவழி காட்டப்பா..” என்று வேண்டிக்கொண்டார்.
மகனைப்பற்றிய
அக்கறை மிகுதியில்தான் அவர் பேசிக்கொண்டே வந்தார். எல்லா அப்பாக்களுக்கும் மகன்
பெரிய ஆளாக வரவேண்டும், மகன் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும், நன்றாக சம்பாதித்து நாலுபேர்
மெச்சும்படி வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள், உழைக்கிறார்கள். மகன்களின் வாழ்வு
நல்லமுறையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்றேதான் எல்லா அப்பாக்களும் தங்கள்
சுகங்களைத் துறந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
அப்பாக்கள்
கனவு காண்கின்ற வாழ்வினை , உயர்வினை அடைய நினைத்து உழைப்பதே அப்பாக்களுக்குச்
செய்யும் கைமாறாகும். அப்பாக்களுக்கு மகன்கள் செய்யுமெதுவும் ஈடாகாது என்றாலும்,
அப்பா மகனைப் பற்றிக் காணும் கனவுகளை நிஜமாக்கப் போராடினாலே போதும், நல்ல மனிதனாக
மாற முடியும்.
என்னைப்
பற்றியும் பரிசீலனை செய்துபார்க்கச் செய்தது இந்நிகழ்வு. என்னருகில் அமர்ந்திருந்தவரின்
மகனும் நல்லபடியாய் வரவேண்டும் , தன் தந்தையை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று
மனசெங்கும் வேண்டிக்கொண்டு பேருந்தை விட்டிறங்கினேன். குளிர் காற்று வந்து முத்தமிட்டது.
என் பயணத்திற்கான அடுத்த பேருந்து காத்திருந்தது.
வியாழன், 9 ஏப்ரல், 2015
காதலன்றி வேறில்லை
இக்கோடையிலும்
மா மழையைப் பொழிகிறாய்
என் சாலைகளில்..
நீர் நிறைந்தோடும் நதிக்கரையோரப்
புல்வெளியின்
மரங்களற்ற ஒற்றையடிப்பாதையில்
என்னோடு நடந்தபடி
என் சாயங்காலங்களைக் கவிதைகளாக்குகிறாய்..
வர்ணங்களைப் பூசிக்கொண்ட அந்திவானம்
உன்னைப் பார்த்துப் பார்த்து
அலங்காரம் செய்து தோற்கிறது..
கரைகளோடு
உன்னைப்பற்றிப் பேசிக்கொண்டே
நகரும் நதி
நின்று ரசிக்க எத்தனித்து
முடியாமல் நகர்கிறது
உன்னைப்பார்த்த மகிழ்ச்சிகளை
பூக்களென ஏந்திக்கொண்டு..
திரும்பிய பறவைகள்
நடந்துபோகும் நம்மைக்கவனித்தபடி
பறந்தபடியே
ஒரு அந்திப்பாடலை இசைக்கின்றன..
மஞ்சள் மலர்களை
தன் மேனியெங்கும் இறைத்துவைத்திருக்கும்
தூரத்துத் தார்ச்சாலை
நம்மை அழைக்கிறது..
உன் விரல்களைப் பற்றியபடியே
அத்தார்ச்சாலை தொடுகிறோம்..
மரங்களின் கிளைகள்
கிடார்களாய் மாறி
மெதுவாய் இசைக்கத் தொடங்குகின்றன
உனக்கும் எனக்கும் பிடித்த இசையை..
நம் காதல்கணங்கள் நிரம்பியிருக்கும்
காலத்தின் கைகளில்
பூத்து மணம் பரப்புகின்றன
நமக்குப் பிடித்த வாகைப்பூக்கள்..
-சௌவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)
