வியாழன், 7 ஆகஸ்ட், 2025

தினமும்..

 எத்தனை எத்தனை ரயில்கள்

ஓடிக் கொண்டிருக்கின்றன

ஆனால் ஒவ்வொரு ரயிலையும்

யாரோ ஒருவர் 

அவசர அவசரமாக வந்தும்

தவறவிடுகிறார் 


பேருந்து நிறுத்தத்தில்

யாரேனும் ஒருவர் 

தினமும் பேருந்தைத் தவறவிட்டுவிட்டு

அடுத்த பேருந்துக்காகக் காத்திருக்கின்றார்


எப்படியேனும் ஒரு ஆட்டோ 

பக்கத்திலிருக்கும் இடத்தை 

சுற்றிச்சுற்றிச் சென்று

தூரமென ஏமாற்றி

அதிகம் வசூலித்துவிடுகிறது


அத்தனை கடுமையான சட்டங்களிருந்தும்

எங்கோ ஓரிடத்தில்

கள்ளச்சாராயம் 

காய்ச்சப்பட்டுக்கொண்டேயிருக்கிறது


எது நடந்தாலும் 

எதுவும் நடக்கவில்லையென்றாலும்

பூமி மட்டும் எப்போதும்போல 

இடமிருந்து வலமாகச் 

சுற்றிக்கொண்டேயிருக்கிறது 


-சௌவி

தெரிந்தவர்கள்

எனக்குத் தெரிந்த சுதாகரை
என் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ
என் தம்பிக்கோ தங்கைக்கோ தெரியாது

என் அப்பாவுக்குத் தெரிந்த ராமசாமியை
எனக்கோ என் அம்மாவுக்கோ
என் தம்பிக்கோ தங்கைக்கோ தெரியாது

என் அம்மாவுக்குத் தெரிந்த நீலவேணியை
எனக்கோ என் அப்பாவுக்கோ
என் தம்பிக்கோ தங்கைக்கோ தெரியாது

என் தம்பிக்குத் தெரிந்த மனோகரனை
எனக்கோ என் அம்மாவுக்கோ
அப்பாவுக்கோ தங்கைக்கோ தெரியாது

என் தங்கைக்குத் தெரிந்த கலாவை
எனக்கோ என் அம்மாவுக்கோ
என் தம்பிக்கோ அப்பாவுக்கோ தெரியாது

ஆனால்
சுதாகருக்கும் ராமசாமிக்கும் 
மனோகருக்கும் நீலவேணிக்கும்
கலாவுக்கும்
எங்கள் எல்லோரையும் தெரியும்

-சௌவி