திங்கள், 11 ஜூன், 2018

ஒரு சிறகில் மூன்று பறவைகள் பறக்கின்றன

எங்கிருந்தோ வந்த
ஓர் ஒற்றைக் கருப்புச் சிறகு
முற்றத்திலமர்ந்திருந்த
என் மேல் விழுந்தது
சிறகு காக்கையினுடையதாக இருக்குமா?
குயிலினுடையதாக இருக்குமா?
மைனாவினுடையதாக இருக்குமா?
சிறகினைப்பார்த்து
காக்கையா எனக் கேட்டால்
காக்கையைப் போல் கத்துகிறது
சிறகினைப்பார்த்து
குயிலா எனக்கேட்டால்
குயிலைப்போல் கூவுகிறது
சிறகினைப்பார்த்து
மைனாவா எனக்கேட்டால்
மைனாவைப்போல் பாடுகிறது
ஒற்றைச் சிறகு என்னிடத்தில்
அதில் மூன்று பறவைகள்

-சௌவி

சனி, 9 ஜூன், 2018

பொட்டு

****பொட்டு****

முகம் பார்க்கும் கண்ணாடி
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
தினமொரு தாளுதிர்க்கும் நாட்காட்டி
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
பச்சை வண்ண சாளரக்கதவு
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
அந்தப்புறமும் இந்தப்புறமுமாக
முகத்தைத் திருப்பியபடி ஓடும்
மேசை மின்விசிறி
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
மெல்லிய நீலவண்ணப்பூக்களாலான ஆடையை அணிந்துகொண்டிருக்கும்
தேக்கு மரக் கட்டில்
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
நீந்தாமல் ஒரே இடத்தில் நின்றிருக்கும்
மீன்களைக் கொண்ட குளியலறைக் கதவு
தன் பின்புறத்தில்
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
எப்போதும் வெள்ளையாய்
சிரித்துக்கொண்டிருக்கும்
படுக்கையறைச் சுவர்
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
தன் தலையில்
பறக்காத இரு பறவைகளை சுமந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சி
பொட்டு வைத்துக்கொண்டிருக்கிறது
பெண்ணிருக்கும் வீட்டில்

-சௌவி