வெள்ளி, 10 ஏப்ரல், 2015


பாதை                          10.04.2015

        நேற்றுப் பெய்த மழையின் ஈரம் இன்னும் காற்றோடும் நிலத்தோடும் கலவிக்கொண்டிருந்தது. கதிரவன் வானேற ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுதில் பேருந்தில் பயணிப்பதென்பது எப்போதுமே சுகமானது. சன்னல் வழியாக விரியும் காட்சிகளில் எல்லாமே காலையின் உற்சாகங்கள். எப்படிப்பட்ட மனநிலையையும் உற்சாகத்திற்கு கொண்டுவந்திட குளிர்தடவிய இந்தக் கோடைகாலக் காலைப்பயணங்களால் முடியும். கிராமத்திலிருந்து பொள்ளாச்சி வரையிலான இன்றைய பேருந்துப் பயணத்தில் அப்படியொரு உற்சாகத்தை அனுபவிக்க முடிந்தது.

     பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பாலக்காடு பேருந்திலேறி இடது வரிசையிலிருக்கும் இருக்கையில் அமரப்போனேன். நான் நோக்கிச்சென்ற இருக்கையில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார். லுங்கி வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தார். அவரருகில் சென்று “யாராவது வர்ராங்களா?” எனக் கேட்டதும் இன்முகத்தோடு “இல்லை உட்காருங்க” என சன்னலோரம் நகர்ந்துகொண்டார். அது பேருந்தின் முதல் வாயிலை ஒட்டிய இருக்கை.

     அவரை நல்ல மனிதர் என மனசு உடனே முடிவு செய்தது. தொடர்ச்சியான பேருந்துப் பயணங்கள் மனித மனங்களைப் படிக்கும் கலையைச் சற்று கற்றுக்கொடுத்திருந்தது. சிலர் இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒற்றை ஆளாய் அமர்ந்துகொண்டு,  யாரேனும் உட்கார வந்தால் வேண்டா வெறுப்பாகத் தள்ளி உட்கார்வர். அப்படியே உட்கார்ந்தாலும், ஏதோ ஒரு பாகப்பிரிவினை மாதிரி, உடற்கட்டு ஒல்லியாக இருந்தாலும், பாதி இருக்கையை ஆக்கிரமித்தபடி, கால்களை விரித்து அமர்ந்து கொள்வர்.  சிலரோ “பின்னுக்கு சீட்டிருக்கு பாருங்க. சௌரீமா உக்காருங்க” எனத் தன் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துவர். அப்ப்டி எந்த மாதிரியான குரூர எண்ணங்களுமற்ற ஒரு மனிதராகவே இன்று என்னருகில் அமர்ந்திருந்த அம்மனிதரைக் கண்ணுற்றேன். பக்கத்தில் அமர்ந்துவரும் மனிதர்களைப் பொருத்தும் நம் காலைப்பயணத்தின் மனநிலை மாறிவிடுகின்றது. இனிமையான முகத்தோடு நகர்ந்து அமர்பவர்கள் நம் பயணத்தையும் இனிமையாக்கிவிடுகிறார்கள். வெறுப்பு சூழ்ந்த மனநிலை மனிதர்களின் அருகாமை நம் பயணத்தையும் ஒருவிதமான இடறுதலுக்குள்ளாக்குகிறது. அப்படி இடறுதலேதுமற்றதாய் அமைந்தது இப்பயணம். கொழிஞ்சாம்பாறைக்கு நான் பயணச்சீட்டு வாங்கினேன்.

     தென்னை மரங்களூடான கருப்புப் பாதையில் கோடைகாலத்தின் குளுமை தடவிய காற்று தழுவப் பயணிப்பது மிகவும் சுகமானது. நான் வெளியே வேடிக்கை பார்ப்பதும், கையிலிருந்த கைப்பேசியில் fb , whatsapp  பார்ப்பதுமாக அமர்ந்திருந்தேன். அருகில் அமர்ந்திருந்தவர் யாருடனோ பேசுவது போலிருக்க, அவர் என்னிடம்தான் ஏதோ பேசுகிறாரென அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்காமல் சன்னலுக்கு வெளியே பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தார். காதில் ஏதும் கைப்பேசி வைத்து பேசிக்கொண்டிருக்கிறாரா எனப் பார்த்தேன், அதுவுமில்லை. காது கொடுத்து உன்னிப்பாக அவர் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

     “எங்காவது சுத்தறதுக்குப் போறது..  எப்ப வர்ரன், எங்க போறேன் ஒரு எழவுஞ் சொல்றதில்ல. எப்பப்பாரு செல்போன்ல நோண்டிட்டே இருக்கறது” என்றார். ஏதோ ஒன்று என்னைத் தாக்க நான் கைப்பேசித்திரையை மூடி சட்டைப்பையில் போட்டுக்கொண்டேன்.

                அந்த மனிதர் தொடர்ச்சியாகப் பேசியபடியேயிருந்தார்.
     “வீட்டுக்கு எதுவுங்குடுக்கறதில்ல. லீவானா பந்தாடப் போகவேண்டியது. அப்பனெவ்ளோ கஷ்டப்படறான், எங்க வேலைக்குப் போறான், என்னத்தயுங் கேக்கறதில்ல. நல்லாத் திங்கவேண்டியது, பந்தாட வேண்டியது..  இப்பிடியிருந்தா எப்பிடி சாப்பாடு கெடைக்கும்?”

     புரிந்துகொண்டேன் தன்னுடைய மகனைப்பற்றி திட்டிக்கொண்டே வருகிறார் என. அது ஏன் மகனை நேராய் நிற்கவைத்துக் கேட்பது போன்றோ அல்லது வேறு யாருடனோ தன் மனதைச் சொல்லிக்கொண்டிருப்பது போலவோ பேசியபடியிருந்ததுதான் ஏனென்று தெரியவில்லை.

     “கொஞ்சங்கோட பொறுப்பே கெடயாது, தெல்லவாரித்தனமா திரிய வேண்டியது. வீட்ல என்ன கஷ்டம்.. எப்பிடி சாப்பாட்டுக்கு ஜாமானமெல்லாம் வாங்கறாங்க? ஒன்னுமே பாக்கறதில்லே. வரவேண்டியது, திங்கவேண்டியது, கழுதையாட்டம் சுத்த வேண்டியது. அப்பனுக்கு எந்த ஒத்தாசையுஞ் செய்யறதில்லை. இப்பிடியிருந்தா எப்பிடி வெளங்கறது? ஒன்னுந்தெரீல.” மகனின் பொறுப்பற்றதனத்தை எண்ணி, குமுறிய அவரின் வார்த்தைகள் வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தன. இடையிடையே சாலையில் எதிர்ப்படும் கோவில்களையெல்லாம் நோக்கி இரு கைகளையும் கூப்பி “ஆண்டவா..  நல்லவழி காட்டப்பா..” என்று வேண்டிக்கொண்டார்.

     மகனைப்பற்றிய அக்கறை மிகுதியில்தான் அவர் பேசிக்கொண்டே வந்தார். எல்லா அப்பாக்களுக்கும் மகன் பெரிய ஆளாக வரவேண்டும், மகன் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும், நன்றாக சம்பாதித்து நாலுபேர் மெச்சும்படி வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள், உழைக்கிறார்கள். மகன்களின் வாழ்வு நல்லமுறையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்றேதான் எல்லா அப்பாக்களும் தங்கள் சுகங்களைத் துறந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

     அப்பாக்கள் கனவு காண்கின்ற வாழ்வினை , உயர்வினை அடைய நினைத்து உழைப்பதே அப்பாக்களுக்குச் செய்யும் கைமாறாகும். அப்பாக்களுக்கு மகன்கள் செய்யுமெதுவும் ஈடாகாது என்றாலும், அப்பா மகனைப் பற்றிக் காணும் கனவுகளை நிஜமாக்கப் போராடினாலே போதும், நல்ல மனிதனாக மாற முடியும்.

     என்னைப் பற்றியும் பரிசீலனை செய்துபார்க்கச் செய்தது இந்நிகழ்வு. என்னருகில் அமர்ந்திருந்தவரின் மகனும் நல்லபடியாய் வரவேண்டும் , தன் தந்தையை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று மனசெங்கும் வேண்டிக்கொண்டு பேருந்தை விட்டிறங்கினேன். குளிர் காற்று வந்து முத்தமிட்டது. என் பயணத்திற்கான அடுத்த பேருந்து காத்திருந்தது.



-சௌவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக