செவ்வாய், 12 மே, 2020

தொடர்பு


தொடர்பு


காலையில் எழுந்து 
நடைப்பயிற்சிக்கோ தோட்டத்துக்கோ
நடந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள்
மரமொன்று தன் ஈர இலைகளால் 
புன்னகைத்து
உங்கள் நாளைத் துவக்கி வைக்கிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
தண்ணீர்கூட ஊற்றியதில்லை

பதட்டமாக 
எங்கோ சென்றுகொண்டிருக்கிறீர்கள்
வழியோர மரமொன்று
தன் விரல்களெங்கும் ஏந்திக்கொண்டிருக்கும் மலர்களால்
உங்கள் மனசை நீவி நீவி
உங்களை ஆசுவாசப்படுத்துகிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
எந்த உதவியும் செய்ததில்லை

வெயில் தாங்கமுடியால்
வியர்வை வழிய
நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்
நிழலை நீட்டி வரவேற்கும் மரமொன்று
உங்களை நிறுத்தி
உங்கள் வியர்வைத் துளிகளைத்
துடைத்துவிடுகிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
ஆகாரமெதுவும் கொடுத்ததில்லை

களைப்போடு
எங்காவது இளைப்பாறலாம்
என நினைக்கிறீர்கள்
மரமொன்று தன் மடியிலேந்தி
உங்களைத் தாலாட்டி
உறங்க வைக்கிறது
அந்த மரத்தை
நீங்கள் நட்டதில்லை

சம்பந்தமில்லாதவர்களாலேயே
கட்டமைக்கப்படுகிறது
வாழ்வின் பெரும்பங்கு
ஒவ்வொருவருக்கும்

-சௌவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக