கேள்விகளற்றவன்
பறக்கச் சிறகுகளிருந்தும்
போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையை
தத்தித் தத்தி நடந்து கடக்கும்
காகத்திடம்-
பளிச்சென மிக அழகாய்
எல்லாக்குப்பைகளையும் கூட்டிய பின்னரும்
கொஞ்சநேரம்கூட அச்சுத்தத்தைப் பேணுவோமென்ற
பிரக்ஞையின்றி
உடனே இலைகளை உதிர்க்கத்
துவங்கியிருக்கும் மரத்திடம்-
மரத்திலிருந்து இறங்கி வந்து
பயந்து பயந்து
மரத்தடிக் கடையில் இட்லியைக்
கொரித்துக்கொண்டு ஓடும் அணிலைத்
தடுக்காத பாட்டியிடம்-
யாருடைய அவசரத்தைப் பற்றியும்
கவலைப்படாமல்
எந்த வாகனச் சப்தத்துக்கும் பயப்படாமல்
சாலை நடுவில் தவறி விழுந்திருக்கும்
வைக்கோல் கற்றையை
உதறியபடி தின்றுகொண்டிருக்கும்
மடி கனத்த பசுவிடம்-
சீரான இடைவெளியில்
ஒவ்வொரு வாகனத்தையும்
சிறிது தூரம் துரத்தித் துரத்தித்
தன்நிலை திரும்பும் நாயிடம்-
ஏன் என்ற கேள்விகேட்க
என்னிடம் எந்தக் கேள்வியுமில்லை
நான் கேள்விகளற்றவன்
-சௌவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக