திங்கள், 20 ஜூன், 2016


                                 20.06.2016
*****பொள்ளாச்சியில் கவிதையாக******

எங்கெங்கும் கவிதைகளாகவே கொட்டிக்கிடக்கின்றன. கவிதைகள் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. இன்பங்களிலும் கவிதை உண்டு, துன்பங்களிலும் கவிதை உண்டு. நம் எல்லா நிகழ்வுகளிலும், நம் எல்லா நேரங்களிலும் கவிதை நம்மோடு பயணித்துக்கொண்டேயிருக்கி
றது. கவிதை நாம் சிரிக்கும்போது உடன் சிரிக்கிறது. அழும்போது கரம் நீட்டி விரல்கொண்டு கண்ணீரைத் துடைத்துவிடுகிறது. குமுறும் சமயங்களில் கவிதை தன் மார்போடு அணைத்துக்கொள்கிறது, தன் மடியில் சாய்த்துக்கொண்டு தலைகோதி விடுகிறது. இயற்கையின் அழகைக் கரங்களாக்கி இதய கிடாரின் நரம்புகளை மீட்டி உற்சாக ராகமிசைக்க இந்தக் கவிதைதான் எப்போதும் தோழமையாயிருக்கிறது, அன்பின் ஊற்றாயிருக்கிறது....இன்ன பிறவாயுமிருக்கிறது.
அப்படியான கவிதை உள்ளங்களோடு, கவிதைகளோடு கலக்க, கலந்து புதிய கவிதைகளைப் பெற்றிட அழகான வாய்ப்பாக, அன்பான நாளாக அமைந்தது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் எட்டுக்கவிதை நூல்கள் வெளியீட்டு விழா. அம்சப்ரியாவும் பூபாலனும் இந்தக் கவிதையின்மேல் கொண்டிருக்கும் காதல் அளப்பரியது. அதனால்தான் அவர்களும் கவிதைகளாகவே இருக்கிறார்கள். எங்கெல்லாம் கவிதை முளைக்கிறதோ, அந்த வாசத்தை நுகர்ந்து, அந்தப்பூவை வாடவிடாமல் நீரூற்றி, உரமூற்றி, உற்சாகப்படுத்தி, எங்கோயிருந்த பூக்களை, அப்பூக்களின் வாசத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்து..... என அம்சப்ரியாவும் பூபாலனும் செய்யும் கவிதைத்தொண்டு அளப்பரியது. எட்டுக் கவிதை நூல்களும் அப்படித்தான் நேற்று உலகுக்கு அறிமுகமாயின.
சனிக்கிழமை இரவெல்லாம் ரயிலோடும் பேருந்தோடும் சிநேகித்து ஞாயிற்றுக்கிழமை காலை வீடேகி அவசர அவசரமாய்க் குளித்து, சாப்பிட்டுவிட்டு ‘வந்தவுடனே எங்கடா புறப்பட்டுட்டே’ என்ற அம்மா அப்பாவின் கேள்விக்குக் கவிதையாகி, கவிதை முத்தங்களை வாங்கிக்கொண்டு பொள்ளாச்சி NGM கல்லூரிக்குள் நுழைகையில் ஒரு கவிதையின் சப்தம் கேட்டது. அனாமிகா..  அதே அனாமிகா.. அதே பேரன்பு.. நெகிழ்ந்தது மனசு. அணைத்துக்கொண்டதில் ஆகாசம் இனித்தது. பின் முகநூலில் மட்டுமே கண்டிருந்த தோழமை ஆனந்த் தமிழின் சந்திப்பில் கடல் அலைகள் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தன. மர நிழல்களைப் போர்த்திக்கொண்டிருந்த கல்லூரி வாசல் கவிதையானது.
பின் பஞ்சு மிட்டாய் நிறத்தில் சட்டையணிந்திருந்த ஆன்மன் அடையாளங் கண்டுகொண்டார், முதன் முதலாய்க் கண்களில் தரிசனம். பஞ்சுமிட்டாய் போன்றே அவ்வளவு மென்மை ஆன்மனின் மனசு. ஜனுக்குட்டியின் பூனைக்கண்களால் மனசுக்குள் ஆச்சர்யமூட்டிய கீதாபிரகாஷ் அவர்களோடும் முதல் சந்திப்பு. மர நிழல்களில் வீழ்ந்து கிடந்த இலைகளுக்கு நடுவே புன்னகைகளும்...  அத்தனை அழகாய்..  அவ்வளவு அன்பாய். சோலை மாயவன், இளையபாரதி, புன்னகை பூ ஜெயக்குமார், மகுடீஸ்வரன்.மு, காளிமுத்து, கோட்டீஸ்வரன், அபி என இதயத்திலிருக்கும் நட்புக்கள் அன்பின் முத்தங்களைப் பகிர்ந்தனர். ஆகாசம் முழுக்க அத்தனை பறவைகள்....அத்தனை அழகு..
முகநூலில் மட்டுமே கண்டிருந்த சக்தி, நீ சிம்மா, ச.துரை ஆகியோருடன் முதல் சந்திப்பு. சக்தியின் அன்பான அமைதியான முகம் அகவெளிகளில் இசை மீட்டியது. நீ சிம்மாவின் சிரிப்பும் பேச்சும் அத்தனை பிடித்திருந்தது. ஒரு மிக நெருங்கிய சிநேகிதனாய் நீ சிம்மாவை உணர்ந்தது இருதயம். நீ சிம்மாவுக்கு மனசுக்குள் தனியாய் ஒரு சிம்மாசனம் செய்து அமர்த்திக் கொண்டேன். பார்க்க வேண்டும், பேச வேண்டுமென நீண்ட நாட்களாய் நினைத்திருந்த ச.துரையைக் கண்டதில் வறண்டிருந்த நதியில் வெள்ளம் வந்ததுபோல மகிழ்ந்தது மனசு. கவிதையின் கரங்கள் இறுக்கமாய் அணைத்துக்கொண்டது எங்கள் இருவரையும்.
இதயத்தில் எப்போதும் இசை மீட்டிக்கொண்டிருக்கும் யாழி, கனிமொழி ஜி, இளஞ்சேரல்,பொன் இளவேனில், சோழநிலா, அதிரூபன் ஆகியோரைக் கண்டு அளவளாவியதில் மட்டற்ற மகிழ்ச்சி. திருமணப் பத்திரிக்கையோடு வந்து அழைப்பு விடுத்த உமா பாரதிக்கு நெஞ்சம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள். காதலின் பொன்வீதியில் இனி எப்போதும் உங்கள் கால்கள் பயணிக்கட்டும் உமா பாரதி. கவிதைகளின் மீது தீராக் காதல் கொண்டவரும், சிறந்த கவிமனம் படைத்தவருமான, த மு எ ச வின் தலைவருமான, வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களின் சந்திப்பிலும் பேரானந்தம். இவ்வளவு அமைதியாயிருக்கும் இவருக்குள் இவ்வளவு ஆழமான கவிதைகளா என எப்போதும் வியக்க வைக்கும் மௌனம் ரமேஷின் அமைதியே ஒவ்வொரு சந்திப்பிலும் அப்படி அணைத்துக்கொள்ளும். இப்போதும் அப்படியே. இப்போது வெளிவந்திருக்கும் மணல் வீட்டில் இவர் கட்டியிருந்த கவிதைகளின் அடர்த்தி இந்த பூமியைவிடப் பெரியது. சின்னச் சின்ன வரிகளுக்குள் இவர் கட்டி வைக்கும் ஆகாசம் மிக வியப்புக்குரியது.
பிறகு நிகழ்ச்சி அரங்கில். நிகழ்ச்சி - நூல் வெளியீடு – விமர்சனம் – ஏற்புரை என மிகச்சிறப்பாக நடந்தது கவிதை நூல்கள் வெளியீட்டு விழா. திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், பாமரன் ஆகியோரின் பேச்சு அருமை. பாமரன் வழக்கம்போல அத்தனை பேரின் கவனத்தையும் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டார். இவர் கொள்ளையடிப்பதே தெரியாது, ஆனால் கொள்ளையடித்துவிடுவார் மனதை. திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் பேச்சு இன்னும் ஒலிக்கிறது காதுக்குள். அதுவும் நடந்து முடிந்த தேர்தலை தன் வார்த்தைகளில் சொல்லிய விதம் EXCELLENT.
மதிய உணவு மிகச் சிறப்புடனும் மிகச் சுவையுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மரங்களடர்ந்த கல்லூரி மைதானத்தில் கவித்தோழமைகளோடு வயிற்றுக்கும் ஈந்தது இன்னொரு கவிதை அனுபவம். கொலுசு அறவொளி அவர்கள் உங்களுடைய ரசிகர்கள் என பானுமதி அவர்களையும், கிருத்திகா அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார். கவிதைகளால் இணைந்த இந்த இருதயங்கள் என்னைப் பறவையாக்கின. வானம் எல்லையற்ற சந்தோஷங்களால் விரிந்திருந்தது. இருவருக்கும் என் கொள்ளைப் பிரியங்கள்.
அறவொளி..  பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டு மிகச் சாதாரணமாய். நூல்கள் வாங்குவதையே இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளாத ஒரு சமுதாயத்திற்கு ஒரு நூலகம் அமைத்து நூல்களைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற ஒரு மிகப்பெரிய சிந்தனையைக் கருவாக்கி உருவாக்கியது மிகப்பெறும் சாதனை. என்றென்றும் காலத்தின் உதடுகளால் உச்சரிக்கப்படவேண்டிய சாதனை. அறவொளியைச் சந்தித்ததும் உரையாடியதும் அத்தனை ஆனந்தம்.
பின் தனசக்தி, தமிழ், உடுமலை ஜெயதூரன் என நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர்களைச் சந்தித்ததில், உள்ளம் பகிர்ந்ததில் அத்தனை வர்ணமயமாய் மாறிப்போனது மனசு.
என்மீது எப்போதும் பேரன்பு கொண்டிருக்கும் ச.தி.செந்தில்குமாரைச் சந்தித்ததில் அவ்வளவு ஆனந்தம். இதயம் பறவையாகியது. உவகை என்ற சொல்லின் அருஞ்சொற்பொருளை மனசுக்குள் பரிமாறியது செந்தில்குமாரின் மாசற்ற அன்பு. பேரன்பின் பிரியங்களை, இதய அன்பின் வரிகளை இப்படிக் கடத்திட முடியுமா என ஆச்சர்யப்பட்டேன் செந்தில்குமாரைப் பார்த்து. காணும்போதெல்லாம் தன் அழகிய புன்னகையால் மனசுக்குள் வெள்ளையடிக்கும் கார்த்தியோடான சந்திப்பில் சந்தோஷப் பூக்கள் மனசுக்குள். கார்த்தி, ச.தி.செந்தில் குமார் இருவரும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மிக முக்கியத் தூண்கள். புன்னகை பூ ஜெயக்குமார், சோலைமாயவன் உள்ளிட்ட இவர்களால்தான் இப்படியொரு கவிதை நிகழ்வு சாத்தியமாயிற்று.
மாலை வரை மிகச் சிறப்பாய் நடந்தேறியது நிகழ்வு. கல்லூரி வளாகமே கவிதையாயிருந்தது. எட்டுக் கவிதை நூல்களைக் கருத்தரித்து பிரசவித்த கவிஞர்கள் அனவருக்கும் இதய வாழ்த்துக்கள். எட்டுத்திசையும் புகழ்பெறட்டும் இந்த எட்டுக் கவிதை நூல்களும். மனசு மகிழ்ந்த நிறைவான நிகழ்வு.
நிகழ்ச்சி முடிந்து பேருந்து நிலையம் சென்று பேருந்தேறி பிடித்த இருக்கையில் அமர்ந்து தொடங்கியது பயணம். மனசெல்லாம் நிறைந்திருந்தன கவிதைகள். பேருந்து மேற்குத்தொடர்ச்சி மலையைக் கடக்கையில் எதிர்கொண்டு வரவேற்று பேருந்துக் கண்ணாடியில் கவிதைகளை எழுதத் தொடங்கியது தென்மேற்குப் பருவ மழை. நான் என்னுடைய பையைத் திறந்து இரா.பூபாலனின் ஆதிமுகத்தின் காலப்பிரதியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். கவிதைப் புத்தகத்தின் பக்கங்களை வாசிக்கும் பேரார்வத்தில் இன்னும் பலமாய் கண்ணாடி தட்ட ஆர்ம்பித்தது மழை.

-சௌவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக